பெங்களூரு:
கர்நாடகா அரசு தலைமை செயலராக பணியாற்றிய விஜய பாஸ்கர், இன்று பணியிலிருந்து, ஓய்வு பெறுகிறார். இவர் கொரோனா உட்பட, பல நெருக்கடியான சூழ்நிலையை, திறமையாக சமாளித்தவர்.
கர்நாடக அரசின் தலைமை செயலராக, 2018 ஜூலை 1ல் விஜயபாஸ்கர் பொறுப்பேற்றார். பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ., பட்டம் பெற்ற இவர், 1983ம் ஆண்டு அதிகாரியாவார்.கொப்பல் துணை மண்டல அதிகாரியாக, பணியை துவக்கிய இவர், விஜயபுரா, மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்தார். கிராம அபிவிருத்தி, பஞ்சாயத்துராஜ்துறை, வனத்துறை, நகர அபிவிருத்தி துறை கூடுதல் செயலராக பணியாற்றினார். பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரி, குடிநீர் வாரிய தலைவராக பணியாற்றியவர்.விஜயபாஸ்கர், தன் மகளின் திருமணத்துக்காக மட்டும், இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்தார். இதை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும், விடுமுறை எடுத்ததில்லை என, அவரது சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
உள்துறை கூடுதல் தலைமை செயலர் ரஜனீஷ் கோயல் கூறியதாவது:மாநிலத்தில், கொரோனா தொற்று பரவ துவங்கிய போது, விஜய பாஸ்கர் அற்புதமாக செயல்பட்டார். திறமையான, நேர்மையாக அதிகாரி. ஊரடங்கு நேரத்தில், அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில், தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். ஊரடங்கின் போது, இவரது முடிவுகள் சிறப்பாக இருந்தது.
பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலை திட்டத்தை, சரியான பாதைக்கு கொண்டு வர உழைத்தவர். விஜயபாஸ்கர் முயற்சித்திருக்காவிட்டால், இத்திட்டம் மேலும் இரண்டு ஆண்டு, தாமதமாகியிருக்கும். பார்க்க சாதாரண மனிதராக தோன்றினாலும், கடும் உழைப்பாளி. மாநிலத்துக்கு அவர் பெரிய சொத்து.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE