கோபி: ''முதல்வரின் ஒப்புதல் பெற்று, பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும், ''என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே, குருமந்தூரில், 24.67 லட்சம் ரூபாய் மதிப்பில், 193 பயனாளிகளுக்கு, இலவச ஆடுகளை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவராக வேண்டும் என்பதற்காகவே, தனியார் கல்வி நிறுவனங்களில், 'நீட்' தேர்வுக்காக மாணவர்கள் சேர்க்கையாகின்றனர். ஆனால், அனைத்து துறையிலும் முன்வரவேண்டும் என்பதற்காக, பெற்றோர் விரும்பி தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்கின்றனர். பொதுத்தேர்வை நடத்துவது மற்றும் அத்தேர்வர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து, கல்வித்துறை மூலம் ஆய்வு செய்து முடிவு செய்துள்ளோம். முதல்வரின் ஒப்புதல் பெற்று, பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும். பாடநூல் கழகத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் மீதமானால், கல்வித்துறை மூலம், கரூரில் உள்ள காகித ஆலைக்கு அனுப்புகிறோம். தனியார் பள்ளியோ அல்லது பெற்றோர் ஆசிரியர் சங்கமோ, பாடநூல் கழகத்தில், புத்தகத்தை விலை கொடுத்து, வாங்கும் வசதி ஏற்கனவே உள்ளது. அதேபோன்று தான், மயிலாடுதுறையிலும், ஒரு வியாபாரியும், புத்தகங்களை வாங்கி விற்பனை செய்துள்ளார். ஆனால், இதுவரையில் அரசு பள்ளியில், புத்தகம் விற்பனை குறித்து, எந்த தவறும் நடக்கவில்லை. இதையே பெரிய குற்றச்சாட்டாக கூறுகின்றனர். இது குறித்து விபரம் அறிந்தவர்கள், அது குறித்து குறை கூற மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE