கிருஷ்ணகிரி: கோவை தங்க நகை வியாபாரியிடம், 95.43 லட்சம் ரூபாயை ஏமாற்றி எடுத்துச்சென்ற, ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையை சேர்ந்தவர், தங்க நகை வியாபாரி அஸ்வின்குமார், 38; தங்கத்தை குறைவான விலைக்கு தருவதாக, அவரை, மர்ம கும்பல் ஒன்று கிருஷ்ணகிரிக்கு வரவழைத்தது. இதையடுத்து, காரில், அஸ்வின்குமார் உள்ளிட்ட மூவர், திருவண்ணாமலை சாலை பனகமுட்லுவில் உள்ள, தனியார் கல்லூரி அருகே வந்துள்ளனர். அங்கு, அஸ்வின்குமாரின் மொபைல்போனை வாங்கிய மர்ம கும்பல், அதிலிருந்த, 'சிம்' கார்டை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு போனை, திருப்பி கொடுத்துள்ளது. பின், அவர்களிடமிருந்து, 95.43 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு, தங்கத்தை எடுத்து வருவதாக கூறி, காரில் சென்றவர்கள், திரும்பவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த, அஸ்வின்குமார், போலீசாருக்கு போன் செய்ய முயன்றபோது, மொபைல்போனில், 'சிம்' கார்டு இல்லாதது தெரிந்தது. இது குறித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜசேகர் செட்டியார், நாகர்கோவிலை சேர்ந்த சி.எஸ்.ஐ., சர்ச் பாஸ்டர் மார்டின், கார் ஓட்டுனர் ராஜசேகர் உள்ளிட்ட ஏழு பேர், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் ஏழு பேர் மீதும், வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE