ஓசூர்: கல்வி உதவித்தொகை மோசடி புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியரை, மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டிய சம்பவம், பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி, முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்கள், தங்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையில், பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, கடந்த ஜூலை, 18ல், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலரிடம் புகார் செய்தனர். இது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி, பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்த ஹேமா, ஆசிரியர் வினோத் குமாரிடம் விசாரணை நடக்கிறது. ஐந்து கட்ட விசாரணை முடிந்த பின்பும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையே, தலைமை ஆசிரியர் சுகந்தியை, மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பொன்னாடை போர்த்தி, நடப்பாண்டில் சிறப்பாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் என, வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படம், 'வாட்ஸ் ஆப்'பில் வைரலானதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, கல்வி மாவட்ட அலுவலர் ஜோதி சந்திராவிடம் கேட்டபோது, ''கொரோனா காலக்கட்டத்தில், மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' மூலம் வினாத்தாள் அனுப்பி, தேர்வு எழுதச்செய்து, ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள்களை வீட்டிற்கே சென்று பெற்று, திருத்தி வழங்கியுள்ளார். இ-பாலோ ரிஜிஸ்டரை, அவர்தான் முதலில் வழங்கினார். அவரது, கல்வி செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததால் பாராட்டினேன். அவர் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE