ஓசூர்: கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டிற்கு ஓசூரிலிருந்து, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும், 12 கோடி ரூபாய் அளவிலான ரோஜா ஏற்றுமதி, உருமாறிய கொரோனா பரவலால் முடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், ரோஜா, ஜெர்புரா, கார்னேசன், கிரசாந்திமம் போன்ற கொய்மலர்கள் அதிகளவு சாகுபடியாகிறது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டில், சிங்கப்பூர், மலேசியா, துபாய் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, இம்மலர்கள் ஏற்றுமதியாகும். ஆனால், நடப்பாண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்கு, 100 சதவீத ஏற்றுமதி முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தேசிய தோட்டக்கலைத்துறை இயக்குனர், பாலசிவப்பிரசாத் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால், 60 சதவீத விவசாயிகள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு சாகுபடிக்கு செடிகளை பராமரிக்கவில்லை. 40 சதவீத விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்ட நிலையில், அதிக பனிப்பொழிவால், உற்பத்தி பாதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில், உருமாறிய கொரோனா பரவலால், நடப்பாண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளில், கொரோனாவால் பூக்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதனால், 100 சதவீத ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, 12 கோடி ரூபாய் மதிப்பிலான, 25 லட்சம் மலர்களை, உள்ளூர் சந்தைக்கு அனுப்பி வருகிறோம். தற்போது ஒரு ரோஜா, ஏழு ரூபாய், 10 பூக்கள் கொண்ட ஒரு கட்டு கிரசாந்திமம், 250 ரூபாய்க்கும், உள்ளூர் சந்தைகளில் விற்பனையாகிறது. பிளாஸ்டிக் மலர்கள் மற்றும் கொரோனாவால், ஓசூர் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டமடைந்து வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE