கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் மலர்விழி தலைமைவகித்தார். மாவட்டத்தின், எட்டு ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர்கள் அலுவலகத்தில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். கலெக்டர் மலர்விழி பேசியதாவது: விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒருவார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் விளைபொருட்களை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். உழவன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து விவசாயிகள் தங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் மானிய திட்டங்களை தானே பதிவு செய்து பெற்று பயன்பெறலாம். இவ்வாறு, அவர் பேசினார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE