நாமக்கல்: 'கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரை, தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு, முதல்வர் பழனிசாமியிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவருக்கு, 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு, 10 சதவீதமாக உயர்த்தி, அதில், 2.5 சதவீதத்தை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான, மாநில அளவிலான திருத்தப்பட்ட பணி மூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நியமனம் மூலம் பணிநியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின் வயதை, இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு, 40, இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு, 45 என, நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட அரசாணையை, திரும்ப பெறவேண்டும். கடந்த, 2019 ஜன.,யில் நடந்த சி.பி.எஸ்., ஒழிப்பு ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கு பெற்ற, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை, உடனடியாக தமிழக அரசு திரும்ப பெறவேண்டும். நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை, இணைய வழியில் உடனடியாக நடத்திட வேண்டும். தமிழகத்தில், மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரை, தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக இருக்க, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE