ஆக்லாந்து :கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடும் கட்டுப்பாடு இருந்தாலும், பல நாடுகளில் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கையுடன், புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.
தென் பசிபிக் தீவான சமோவாவில்தான், புத்தாண்டு முதலில் பிறந்தது. இந்திய நேரப்படி, நேற்று மாலை, 4:30 மணிக்கு, அங்கு, 2021 புத்தாண்டு துவங்கியது. அதைத் தொடர்ந்து, நியூசிலாந்தில் கொண்டாட்டங்கள் துவங்கின.
நியூசிலாந்தில், கடந்த சில மாதங்களாக, ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மிக சிறந்த முறையில், வைரஸ் பரவலைக் கையாண்டதற்காக, நியூசிலாந்து தொடர்ந்து பாராட்டுகளை குவித்து வருகிறது.
![]()
|
இந்நிலையில், அங்கு வழக்கம்போல், ஆக்லாந்து ஹார்பர் பிரிட்ஜ் பகுதியில், கொண்டாட்டங்களுடன் புத்தாண்டு துவங்கியது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.
வைரஸ் பரவல் அதிகம் இருப்பதால், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர், ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் என, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புகழ்பெற்ற இடங்களில், வழக்கமான வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கவில்லை.
பெரும்பாலான நாடுகளில், மிகப் பெரிய திரையில்தான், புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறி கொள்ளப்பட்டன. பல நாடுகளில், தனிநபர் கொண்டாட்டங்களும் நடக்கவில்லை.
மரபணு உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொண்டாட்டங்களுக்கு முழு தடை விதிக்கப்பட்டது.
'புத்தாண்டை வீட்டிலேயே கொண்டாடுங்கள்' என, பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார். அதனால், பிரிட்டனில், புத்தாண்டு கொண்டாட்டம் களை இழந்து காணப்பட்டது.
உலகம் முழுதும் உள்ள மக்கள், கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட வேண்டும் என்ற நம்பிக்கையில், புத்தாண்டை வரவேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE