தைவான் நாட்டை சீனா தனது தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி முழுவதுமாக கையகப்படுத்த முயன்று வருகிறது என அமெரிக்கா கூறி வருகிறது. இதற்கு சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அவ்வப்போது சீனா-தைவான் கடல் எல்லையில் அடிக்கடி கப்பற்படைகள் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன. தைவானுக்கு அமெரிக்கா அவ்வப்போது ஆதரவுக்கரம் நீட்டி வருவது சீனாவை எரிச்சலூட்டுகிறது.

தற்போதைய சீன-தைவான் கடல் எல்லையில் இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் கடந்து சென்றுள்ளன. அமெரிக்காவின் கப்பல் படை பலத்தை காண்பிக்க அமெரிக்க கப்பற்படை வலிய சீனாவை கடந்து சென்றுள்ளது என்று சீன கம்யூனிச அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஹாங்காங், தென்கொரியா, தைவான் உள்ளிட்ட பல நாடுகளுடன் நட்பு பாராட்டும் அமெரிக்கா, அவ்வப்போது சீனாவை அச்சுறுத்த இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. யூஎஸ்எஸ் ஜான் எஸ்.மெக்கானிக், யூஎஸ்எஸ் கர்திஸ் வில்பர் ஆகிய ஏவுகணைகளை அழிக்கும் திறன்கொண்ட அமெரிக்க போர்க்கப்பல்கள் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு வழக்கமான பயிற்சிக்காக தைவான்-சீன கடல் எல்லையை கடந்துசென்றது என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

இதனையடுத்து சீன பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா அவ்வப்போது தனது ஆயுத வளத்தை சீனாவின் முன்னிலையில் தம்பட்டம் அடித்துக்கொள்ள இவ்வாறு செய்கிறது என்று கூறியுள்ளது. மேலும் தொடர்ந்து அமெரிக்கா இவ்வாறு அத்துமீறலில் ஈடுபட்டால் சீன கடற்படை பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE