கோவை:கஞ்சா வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் பெற முயன்ற போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த முன்னாள் கஞ்சா வியாபாரி விஜயகுமார். தற்போது கட்டட தொழிலாளியாக உள்ளார். இவரிடம் கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அவர் மீது கஞ்சா வழக்கு பதியாமல் இருக்கவும், சிறிய அளவிலான வழக்கு பதிந்து பிணையில் விடுவிக்க ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் கஞ்சா வியாபாரி ரூ.30 ஆயிரத்தை மூவரிடமும் வழங்கினார்.
கஞ்சா வியாபாரி, மனைவி மகேஸ்வரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து ரசாயனம் தடவப்பட்ட ரூ.70 ஆயிரத்தை கஞ்சா வியாபாரியிடம் கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட கஞ்சா வியாபாரி கோவை கணபதி பகுதியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் சரோஜினி, ஏட்டுகள் ராமசாமி, ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
லஞ்சத்துக்காக தாலியை விற்க முயற்சி
போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ரூ.30 ஆயிரத்தை கொடுத்த விஜயகுமார், மீதிப்பணத்தை தருவதற்காக தனது மனைவியின் தாலியை விற்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து உறவினர் ஒருவர் அளித்த அறிவுரையின் பேரில் மகேஸ்வரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும், ஏற்கனவே விஜயகுமாரிடம் மூன்று முறை கஞ்சா விற்பனை செய்ததாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பணம் பெற்று விடுவித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE