ஐதராபாத்:ஆந்திராவில், ராமர் சிலையை சேதப்படுத்தியோரை கைது செய்ய வலியுறுத்தி, அரசியல் தலைவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, விஜயநகரில், 400 ஆண்டுகள் பழமையான, ராமதீர்த்த கோவில் உள்ளது. விஷமிகள் சிலர், இக்கோவிலில் உள்ள ராமர் சிலையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று, அருகில் உள்ள வயல்வெளியில் வீசிச் சென்றுள்ளனர்.இதையடுத்து, சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து,தெலுங்கு நடிகரும்,ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் கூறியதாவது: இந்த ஆட்சியில், பிதாபுரம், கொண்ட பிட்ரகுண்டா, அந்தர்வேதி கோவில்கள் சூறையாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தர்வேதி லஷ்மி நரசிம்மர் கோவிலின் தேர், தீயிட்டு எரிக்கப்பட்டது. இதுவரை ஒருவரும் கைது செய்யப்பட வில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியதாவது:கடந்த, 19 மாதங்களில், ஹிந்து கோவில்கள் மீது, 120 தாக்குதல்கள் நடந்துள்ளன. தாக்குதலை கண்டிக்கவோ, சேதப்படுத்தியோரை கைது செய்யவோ உத்தரவிடாமல், முதல்வர் வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE