புதுடில்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின், 'கோவிஷீல்ட்' தடுப்பு மருந்துக்கு, அவசரகால பயன் பாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்க, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு, நேற்று பரிந்துரைத்தது.
பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையும், 'ஆஸ்ட்ராஜெனகா' நிறுவனமும் இணைந்து, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளன.
சீரம் நிறுவனம்கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பு மருந்தை, நம் நாட்டில் பரிசோதித்து, தயாரிக்கும் பொறுப்பை, மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த, 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனம் ஏற்றுள்ளது. இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த, பிரிட்டனின் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பு, சமீபத்தில் அனுமதி வழங்கியது. முன்னதாக, இதே கோரிக்கையுடன், டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம், சீரம் நிறுவனமும் விண்ணப்பித்தது.
பாதுகாப்பு
இந்த கோரிக்கையை பரிசீலித்த, சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு, சீரம் நிறுவனத்திடம், அந்த தடுப்பூசி மருந்து தொடர்பாக, சில தகவல்களை கோரி இருந்தது.
இந்நிலையில், அந்த குழு, நேற்று மீண்டும் கூடி, சீரம் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலித்தது. அதில், கோவிஷீல்ட் தடுப்பு மருந்துக்கு, அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்க, பரிந்துரைக்கப்பட்டது.
இதுகுறித்து, மருந்துகள் ஒழுங்குமுறை விவகாரப் பிரிவின் கூடுதல் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங், நேற்று கூறுகையில்,“கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, பாதுகாப்பானதாக உள்ளது. எனவே, கொரோனா வைரசை தடுக்க, மக்களுக்கு அதை அளிக்கலாம்,” என்றார்.இதில், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் இறுதி முடிவு எடுத்து, அடுத்த ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் 4 பேர் பாதிப்பு
பிரிட்டனில், மரபணு உருமாறிய கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, பிரிட்டனில் இருந்து வருவோருக்கு, நம் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த, நான்கு பேர், இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, நம் நாட்டில், இந்த புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 29 ஆக உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE