கோவை மாவட்டம், தொண்டாமுத்துார், பரமேஸ்வரன் பாளையம், கொங்கு திருப்பதி பெருமாள் கோவிலில், 'ஐபேக்' ஏற்பாட்டில் நடைபெறும் சாமி தரிசனம் நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இன்று பங்கேற்கிறார். அக்கோவிலில் தருகிற செந்துாரத்தை, தன் நெற்றியில் நாமமாக பூசிக் கொள்ளும்படி, ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லப்பட்டு உள்ளது.
தி.மு.க., சார்பில், கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தடையை மீறி, ஊர் ஊராக, மக்கள் கிராம சபை என்ற பெயரில், கூட்டம் நடத்தி வருகிறார்.அதில், கிராம பிரச்னைகள் பற்றி பேசாமல், 'அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம்' என்ற கோஷத்துடன், ஆட்சிக்கு எதிராக குற்றங்கள் சுமத்தி, கண்டன தீர்மானங்களை நிறைவேற்றுகிறார். அதன்படி, கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் தொகுதியில், பரமேஸ்வரன் பாளையத்தில் உள்ள கொங்கு திருப்பதி பெருமாள் கோவில் முன், இன்று மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
கூட்டம் துவக்குவதற்கு முன், ஸ்டாலின், கோவிலுக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு, குருக்கள் தரும் செந்துாரத்தை, தன் நெற்றியில் நாமமாக இட்டுக் கொள்ள வேண்டும் என்றும், அழித்து விடக்கூடாது என்றும், ஸ்டாலினிடம் சொல்லப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, பசும்பொன்னில் நடந்த, முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்ற ஸ்டாலின், கையில் வாங்கிய திருநீறை பூச மறுத்து, கீழே தட்டி விட்டதால் சர்ச்சையில் சிக்கினார். எனவே, இந்த முறை, எந்த சர்ச்சையிலும் சிக்காத வகையில், செந்துாரம் பூசிய முகத்துடன் கோவில் முன், மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார் என, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.இதற்கிடையில், ஆளும் கட்சி மீது ஸ்டாலின் சுமத்துகிற குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் வகையில், அ.தி.மு.க., சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகை விந்தியா பங்கேற்கும் பிரசார கூட்டம், அங்கு நடத்தப்பட உள்ளது.
தடை விதிக்க மனு
ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் லெனின் குமார், தொண்டாமுத்துார் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார்:ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், ஹிந்து மதத்தை இழிவாக பேசுவதை, வாடிக்கையாக வைத்துள்ளனர். பெருமாள் கோவிலில், ஸ்டாலின் தலைமையில், இந்த கூட்டம் நடத்துவதால், மதப் பிரச்னைகளும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, கோவிலை மறைத்து, அதன் புனிதத்தன்மையை அவமதிக்கும் வகையில், அரசியல் கூட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
பாடம் புகட்டுவோம்
தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை: தினம் ஒரு நாடகம் நடத்தும் ஸ்டாலின், பெருமாள் கோவிலில், சிவப்பு கம்பளம் விரிப்பில் நடந்து வந்து, சாமி தரிசனம் செய்து, குங்குமம் இட்டு, தான் ஹிந்து விரோதி அல்ல என, ஏமாற்ற திட்டமிட்டுள்ளார். ஸ்டாலின் பாதயாத்திரை போனாலும், வேப்பிலை கட்டி ஆடினாலும் சரி, ஹிந்துக்களின் விரோதி தி.மு.க., என்பதை, ஒரு காலமும் மறக்க மாட்டோம்; தேர்தலில் பாடம் புகட்டுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்
. நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE