ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடற்கரை பூங்காவில் முள்மரங்கள் வளர்ந்தும், அக்னி தீர்த்த படிகட்டு சிலாப் சேதமடைந்ததால், மத்திய சுற்றுலா நிதி ரூ.2.5 கோடி வீணானது.
புனிதம், சுற்றுலா தலமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் சுற்றுலா மேம்படுத்திட 2019 ல் மத்திய சுற்றுலாதுறை ஒதுக்கிய ரூ.2.5 கோடியை ராமேஸ்வரம் நகராட்சி, தமிழக சுற்றுலாதுறை இணைந்து செலவிட உத்தரவிட்டது. இதில் 60 லட்சத்தில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சேதமடைந்து கிடந்த சிறுவர் பூங்காவை புதுப்பித்தும், பஸ் ஸ்டாண்ட் பின்புறம் புதிய பூங்காவும் அமைத்தனர்.
பின்னர் ரூ.1.90 கோடியில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் உள்ள நடைபாதை, சங்குமால் கடற்கரையில் சேதமடைந்த பூங்காவை புதுப்பித்தனர். இதனுள் குடிநீர் மையம், தியான மண்டபம், கழிப்பறை கூடம், சிறுவருக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை மேடை அமைத்து, 20க்கும் மேலான சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தினர். மேலும் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் சிரமம் இன்றி நீராட கடற்கரையில் சிமென்ட் சிலாப்பில் படிக்கட்டும், பக்தர்கள் தாகம் தணிக்க இரு குடிநீர் மையம், பக்தர்களுக்கு உடைமாற்றும் அறை அமைத்து, இரு ஆண்டுகள் நிறைவடைந்தது.
ஆனால் பஸ் ஸ்டாண்ட் பூங்காவில் பயணிகளோ, உள்ளூர் மக்களோ செல்லாத நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக பூங்கா பராமரிப்பு இன்றி செடிகள் கருகி முள்புதராகி விட்டது. இங்குள்ள குழந்தை சறுக்கு, ஊஞ்சல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடக்கிறது.இதேபோல் ஒலைக்குடா பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இரு ஆண்டுகளாக பூட்டியே கிடந்ததால், இங்கும் முள்மரங்கள் வளர்ந்து விஷஜந்துக்கள் தங்கும் இடமாகி காடு ஆக மாறி கிடக்கிறது.
இங்கும் விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் மையம், கழிப்பறை கூட குழாய், கதவுகள், மக்கள் உட்காரும் கருங்கல் சேர்கள் உடைந்து கிடக்கிறது.அக்னி தீர்த்த கடலோரத்தில் உடைந்து கிடக்கும் சிமென்ட் சிலாப்பால், பக்தர்கள் நீராட முடியாமல் அவதிபடுகின்றனர்.ரூ.2.5 கோடி வீண் மத்திய சுற்றுலா நிதியை தரமான பணிக்கு செலவிடாமல் அவசர கதியில் தரமற்ற பணிக்கு செலவிட்டு ரூ.2.5 கோடியும் வீணாகியது.ராமேஸ்வரம் சமூக ஆர்வலர் எம்.சுடலை கூறுகையில்; 2006 முதல் 2019 வரை ராமேஸ்வரத்தில் சுற்றுலா மேம்படுத்திட மத்திய அரசு ரூ. 15 கோடியும், உள்கட்டமைப்புக்கு மாநில அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியது.
நகராட்சி பராமரிப்பு இன்றி, அதிகாரிகளின் சுயநலத்தால் பல சுற்றுலா திட்ட பணிகள் சேதமடைந்து, தடயமின்றி அகற்றியும் உள்ளனர். தற்போதும் புதிய பூங்காக்கள், குடிநீர் மையம் உள்ளிட்ட பல கட்டமைப்பும் பயன்பாட்டிற்கு வராமலே சின்னபின்னமாகி கிடக்கிறது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE