சிவகங்கை : மத்திய அரசின் பட்டியலிடப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைகளில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப் படவுள்ளது. குடும்ப வருமானம் ஆண்டுக்கு 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் 2 லட்சம் ரூபாய் 2019-20 ம் கல்வியாண்டு முதல் நுாறு மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2020-21 ம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மாவட்ட பிற்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.கல்வி நிறுவனங்கள் தகுதியானவர்களுக்கு சான்றொப்பத்துடன் பரிந்துரை செய்து ஜன., 4 முதல் பிப் 15க்குள் இயக்குநர், பிற்பட்டோர் நல இயக்கம், எழிலகம் இணைப்புக்கட்டடம், 2 வது தளம், சேப்பாக்கம், சென்னை 5, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 044- 2855 1462 என்ற தொலைபேசியில் தெரிந்து கொள்ளலாம் மின்னஞ்சல் tngoviitscholarship@gmail.com என்ற முகவரியில் அனுப்பி வைக்கலாம், என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE