புவனேஸ்வர்:'செவ்வெறும்பு சட்னி சாப்பிடுவதன் வாயிலாக, கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியுமா' என்பது குறித்து பதில் அளிக்கும்படி, மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு, ஒடிசா உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
வாய்ப்பு
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, நயாதர் படிஹல் என்ற பொறியாளர், பல்வேறு ஆய்வு களை செய்து, 'செவ்வெறும்பு சட்னி சாப்பிட்டால், கொரோனா பாதிப்பு குறையும்' என, கடந்த ஆண்டு அறிவித்தார். செவ்வெறும்புகளுடன், மிளகாய் சேர்த்து அரைத்த சட்னியை கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்தால், அவர்கள் குணமடைய வாய்ப்பு உள்ளதாக, அவர் கூறினார்.
ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீஹார், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பழங்குடியினர், செவ்வெறும்பு சட்னி சாப்பிடுகின்றனர். இது, காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட தொல்லைகளில் இருந்து நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது.
தீர்வு
'இந்த சட்னியில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், 'பார்மிக் அமிலம், புரதம், கால்சியம், விட்டமின் பி 12, இரும்பு, துத்தநாகம் ஆகியவை உள்ளன. இதன் காரணமாக, இந்தியா முழுதும் கொரோனா பாதித்தாலும், பழங்குடியினரை மட்டும் அதிகம் தாக்கவில்லை' என, நயாதர் படிஹர், தன் ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தார்.
கொரோனா பாதிப்புக்கு, செவ்வெறும்பு சட்னியால் கிடைக்கும் நிவாரணம் குறித்து விரிவாக ஆய்வு செய்து, அதன் பயன்பாடு குறித்து முடிவெடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி, நயாதர் படிஹல், ஒடிசா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த, ஒடிசா உயர் நீதிமன்றம், செவ்வெறும்பு சட்னியால் கொரோனா பாதிப்புக்கு தீர்வு கிடைக்குமா என்பதையும், அதை பயன்படுத்தலாமா என்பது குறித்தும், மூன்று மாதங்களில் பதில் அளிக்கும்படி, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு கவுன்சிலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE