திருப்பூர்:பரிகார பூஜையின்போது, பெண்ணை கொலை செய்து தப்பிய ஆட்டோ டிரைவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், அகரப்பாளையம் புதுாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 60; வெள்ளகோவிலில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி, 55. இவர்களது மகனுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.
நகை கொள்ளை
மகனுக்கு குழந்தை பேறு வேண்டி, ஆட்டோ டிரைவர் சக்திவேல், 35, மூலம், சில நாட்களுக்கு முன், ஆறுமுகம் - ஈஸ்வரி தம்பதி, பர்னிச்சர் கடையில், அதிகாலையில் பரிகார பூஜை செய்தனர்.அப்போது, தம்பதியை சுத்தியால் தாக்கி, 5 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாயுடன் சக்திவேல் தப்பினார். இதில், ஈஸ்வரி பலியானார். ஆறுமுகம் சிகிச்சையில் உள்ளார். வெள்ளகோவில் போலீசார், நேற்று முன்தினம் இரவு, மதுரையில் சக்திவேலை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:ஆறுமுகத்தின் கடையில் விற்பனையாகும் பொருட்களை, ஆட்டோவில் சக்திவேல் எடுத்து செல்வது வழக்கம்.
மதுரையில் பதுங்கல்
சக்திவேலுக்கு, 1 லட்சம் ரூபாய் கடன் இருந்துள்ளது. பரிகார பூஜை மூலம் பணம் கிடைக்கும் என, பூஜை நடத்தியுள்ளார்.அப்போது, மனம் மாறி, நகை, பணத்துக்காக கொலை செய்துள்ளார். மதுரையில் உள்ள மாமியார் வீட்டில், மனைவியுடன் தங்கியிருந்த சக்திவேலை கைது செய்தோம். இவ்வாறு, போலீசார் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE