திருப்பூர்:'தமிழக நுாற்பாலைகள், மறு பரிசீலனை செய்து, நுால் விலையை குறைக்க வேண்டும்' என்பது, பின்னலாடை உற்பத்தி துறையினரின் ஒருமித்த குரலாக மாறியுள்ளது.ஐரோப்பா, அமெரிக்க, கனடா உள்ளிட்ட வெளிநாடுகள்; வெளிமாநிலங் களிலிருந்து, ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் அதிகளவு திருப்பூரை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தமிழக நுாற்பாலைகள் நுால் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கடந்த இரு மாதங்களில், கிலோவுக்கு 17 ரூபாய் நுால் விலை உயர்த்தப்பட்டது; புத்தாண்டு தினமான நேற்று, மீண்டும், கிலோவுக்கு, 13 முதல் 20 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர் நுால் விலை உயர்வு; நுால் கிடைப்பதில் தட்டுப்பாடுகள், ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:பல்வேறு சிரமங்களை கடந்தே, இந்திய ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், ஆர்டர்களை பெறுகின்றன. இச்சூழலில், தமிழக நுாற்பாலைகள், கட்டுப்பாடின்றி நுால் விலையை உயர்த்திவருவது, கவலை அளிக்கிறது.
இந்திய பருத்தி கழகம், இம்மாதம் பஞ்சு விலை உயர்த்தப்படாது என அறிவித்துள்ளது. எனவே, நுால் விலையை உயர்த்தவேண்டிய அவசியம் ஏதுமில்லை. மறு பரிசீலனை செய்து, நுால் விலையை உடனடியாக குறைக்கவேண்டும். இது குறித்து, தமிழக நுாற்பாலை சங்க பிரதிநிதிகளுடன், ஏ.இ.பி.சி., சார்பில், மீண்டும் பேச்சு நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்க (டிக்மா) தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:திருப்பூர் உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் பல, கொரோனா பாதிப்புகளிலிருந்தே இன்னும் மீளமுடியாமல் தவித்து வருகின்றன. அதற்குள் நுால் விலை, ஜாப் ஒர்க் கட்டணங்கள் தொடர்ந்து உயர்வு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மேலும் சரிவில் தள்ளுகிறது.
உற்பத்தி செலவினம் அதிகரிப்புக்கு ஏற்ப, ஆடை விலையை உயர்த்தமுடிவதில்லை. இதனால், லாபத்தை இழப்பதோடு, நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.கிலோவுக்கு, 15 முதல் 20 ரூபாய் வரை விலை உயர்த்தியிருப்பது கவலை அளிக்கிறது. ஆர்டர் குறைந்தால், நுாற்பாலை முதலான உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நுால் விலையை வாபஸ் பெற்று, தொழில் வளர்ச்சிக்கு கைகொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE