சென்னை:சென்னையில், மோசடி உட்பட, பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட, 359 பேரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, 35.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, பறிமுதல் செய்தனர்.
இது குறித்து, கமிஷனர் அலுவலகம், நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சைபர் கிரைம், கந்துவட்டி, வங்கி, வேலை வாய்ப்பு மோசடி, விபசார தடுப்பு, போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரிக்க, மத்திய குற்றப் பிரிவு செயல்படுகிறது.
கடந்தாண்டு, மத்திய குற்றப்பிரிவு போலீசார், 535 வழக்குகள் பதிந்து, 359 பேரை கைது செய்தனர். இவர்களில், 29 பேரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.மொத்தம், 10 ஆயிரத்து, 136 புகார்கள் பெறப்பட்டு, 8,414 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது, 80 சதவீத புகார்களுக்கு, தீர்வு காணப்பட்டுள்ளன.வங்கி மோசடி தொடர்பாக, 2.12 கோடி ரூபாய் முடக்கப் பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, 40 லட்சம் ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 17 கார்கள் மற்றும் 75 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.போலி கால்சென்டர் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்களிடம் இருந்து, 100 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடி தொடர்பாக மட்டும், 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலை வாய்ப்பு மோசடி கும்பலிடம் இருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நில மோசடி கும்பலிடம் இருந்து, 35.50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE