சென்னை,:விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் வழங்க, 600 கோடி ரூபாயை வழங்கும்படி, மத்திய குழுவிடம், வேளாண் துறையினர் கேட்டுள்ளனர்.
மாநிலம் முழுதும், நெல் உள்ளிட்ட தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடியில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், வாசனை பொருட்கள், பழவகைகள் உள்ளிட்ட தோட்டக்கலை சாகுபடியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், டிசம்பரில் உருவான, 'நிவர்' புயலால், கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உருவான, 'புரெவி' புயலால் பெய்த கனமழையாலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் உள்பட, 15 மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கருக்கு மேலான பயிர்கள் பாதிக்கப்பட்டன.தமிழகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை, மத்திய குழுவினர் இரண்டு கட்டங்களாக ஆய்வு செய்து சென்றனர்.
விரைவில், மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது.அறிக்கையை ஆய்வு செய்து, தமிழகத்திற்கு புயல் நிவாரணத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. பயிர் சேதங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 600 கோடி ரூபாயை வேளாண் துறையினர் கேட்டுள்ளனர்.இதில், வேளாண் பயிர்களுக்கு, 500 கோடி ரூபாய்; தோட்டக்கலை பயிர்களுக்கு, 100 கோடி ரூபாயும் அடக்கம்.மத்திய அரசு நிதி ஒதுக்கியதும், விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்க, வேளாண் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE