கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வறட்சியின் காரணமாக விளை நிலங்கள் செங்கல் சூளைகளாக மாறியது. தற்போது போதிய அளவிற்கு மழை பெய்துள்ளதால் பெரும்பாலான விவசாய நிலங்கள் மீண்டும் சாகுபடிக்கு தயாராகி வருகின்றன.
விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்ட மாவட்டமாக கள்ளக்குறிச்சி உள்ளது. இங்குள்ள இரு டேம்களின் மூலம் தண்ணீர் வசதி பெற்று 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.ஆனால் பல ஆண்டுகளாக போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் விவசாயம் கேள்விக்குறியானது. இதனால் பெரும்பான்மையான விவசாயிகள், தங்களின் விவசாய நிலத்தில் செங்கல் சூளை வைத்து செங்கல் உற்பத்தியில் தீவிரம் காட்டி வந்தனர்.அதன்படி கள்ளக்குறிச்சி, சிறுவங்கூர், மலைக்கோட்டாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் பகுதிளில் கிடைக்கும் செம்மண்களை பயன்படுத்தி, சூளைகள் அமைத்து செங்கல் உற்பத்தியை பெருக்கி வந்தனர்.சாகுபடிக்கு ஏற்ற அளவிற்கான தண்ணீர் வசதி கிடைக்காமல் இருந்ததாலும், மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சியில் குடியிருப்புகள் வெகுவாக பெருகியதாலும் செங்கல் தேவையும் அதிகமாக காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பலரும் தங்கள் விளைநிலங்களில் செங்கல் சூளைகள் அமைத்து செங்கல் உற்பத்தி செய்வதில் அதிகளவில் ஈடுபடனர்.ஆனால் கள்ளக்குறிச்சி பகுதியில் சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக அணைகள் முழுமையாக நிரம்பி அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதனால் மாவட்டம் முழுமைக்கும் உள்ள ஆறுகள், ஏரிகள், குளம், கிணறு போன்ற நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. ஏரிகளிலிருந்து வெளியாகும் நீர் வாய்க்கால்கள் வழியாக விவசாய விளைநிலங்களை நோக்கி செல்வதால் காய்ந்து கிடந்த வறண்ட நிலங்கள் பச்சை பசேலென செடிகள் வளர்ந்து பசுமை நிலங்களாக மாறியது.இதனால் விவசாய தொழில் பாதிப்படைந்து பல்வேறு மாற்று பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வந்த இப்பகுதி விவசாயிகள் உற்சாகமடைந்தனர். நிரம்பிக்கிடக்கும் நீர் நிலைகளால் அடுத்த பாசன காலம் வரை தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என்ற நம்பிக்கை விவசாயிகளிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியது.
சும்மா கிடந்த விளை நிலங்கள், செம்மன் சூளைகளாக மாறிக்கிடந்த நிலப்பரப்புகள் போன்றவற்றை திருத்தி, மீண்டும் பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக பல ஆண்டுகளாக மலைக்கோட்டாலம் பகுதியில் செம்மன் சூளைகமாக மாறிக்கிடந்த விவசாய நிலங்கள், தற்போது மீண்டும் தண்ணீர் நிரம்பி பசுமை பிரதேசமாக மாறி வருவதால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் தங்களின் நிலங்களை திருத்தி, மீண்டும் விவசாய தொழிலில் ஈடுபடத்துவங்கி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE