சென்னை:'இனப்படுகொலையை வேடிக்கை பார்த்தவர்கள், வெட்கம் இல்லாமல், யோக்கியர் போல அறிக்கை விடுவதை சகிக்க முடியவில்லை' என, சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த, தி.மு.க., முன்னாள் எம்.பி.,யும், இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்க தலைவருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, ஈழத்தமிழர்கள் சுய மரியாதையோடு வாழவும், இலங்கையில், தமிழ் மாகாணங்களை ஒழிப்பது குறித்தும், திடீரென அறிக்கை விட்டுள்ளது, ஆச்சரியமாக இருக்கிறது.எல்லாமே வரும் சட்டசபை தேர்தலுக்கான, பித்தலாட்ட கணக்குதான்; வேறெதற்கு இந்த திடீர் கரிசனம்.
கண்டு கொள்ள இல்லை
கடந்த, 2009ல் நடந்த, முள்ளி வாய்க்கால் போரின் போது, மத்தியில், தி.மு.க.,- - காங்., ஆட்சி நடந்தது. அப்போது, தமிழர்களை இலங்கையில் அழித்ததை, கண்டு கொள்ளாமல் இருந்தனர். எங்களை போன்றவர்கள், இலங்கையில் நடந்த துயரத்தை,கருணாநிதியிடம் எடுத்து சொன்னது உண்டு; அப்போது, டி.ஆர்.பாலு கண்டு கொள்ளவே இல்லை.
தமிழகத்தில், 2010க்கு பின், தி.மு.க., மீது எதிர்வினைகள் பல தரப்பில் வர, அந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுபட, அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணனை, தி.மு.க.,வில் சேர்த்து, 'டெசோ' பணிகளை கவனிக்கும்படி, கருணாநிதி கூறினார்; அவரும் கடுமையாக உழைத்தார்.முள்ளிவாய்க்கால் போர் நடந்து முடிந்த பிறகும், இவர்கள் திருந்த வில்லை. டி.ஆர்.பாலு கொழும்புக்கு சென்று, ராஜபக்சேவிடம் கை குலுக்கினார்; விருந்து உண்டார்; பரிசு பெற்றார்.
அருகதையற்ற கட்சி
அதே டி.ஆர்.பாலு அறிக்கை விடுவது வேடிக்கையாக உள்ளது. இனபடுகொலையை வேடிக்கை பார்த்தவர்கள், வெட்கம் இல்லாமல், யோக்கியர் போல அறிக்கை விடுவதை சகிக்க முடிய வில்லை.இலங்கை அரசில் தனக்கென வியாபாரங்களை பெருக்கிக் கொள்பவர்கள், தி.மு.க., தலைவர்கள். அப்படிப்பட்டவர்கள் அறிக்கையில், என்ன நேர்மை இருக்கப் போகிறது.
முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை நடந்த போது, '2ஜி' வழக்கிற்காக, மண்மோகன்சிங் அரசிடம் தி.மு.க., மண்டியிட்டு கிடந்தது.ராஜிவ் படுகொலைக்கு பழி தீர்த்துக் கொள்ள, ஒட்டு மொத்தமாக ஈழ தமிழ் இனத்தை அழிக்க உதவிய காங்., அரசில், பலம் பொருந்திய கூட்டணி தலைவராக டி.ஆர்.பாலு, அப்போது இருந்தார்.அப்போது, தமிழர்களுக்காக வடியாத கண்ணீர், இப்போது நீலிக்கண்ணீராக வடிகிறது. அதை, தமிழக வாக்காளர்கள் நம்புவர் என்று நினைத்தால், ஏமாற்றம் தான் மிஞ்சும்.
இலங்கை தமிழர் நலம் காக்கும் பணியில், இந்திய பிரதமரின் செயல் திறனை குறை சொல்ல, தி.மு.க., அருகதையற்ற கட்சி.இவ்வாறு, கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE