தியாகதுருகம்: தியாகதுருகம் பகுதியில் பெய்யும் மழையால் அறுவடை தருணத்தில் விளைபயிர்கள் நனைந்து சேதமாவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தியாகதுருகம் சுற்றுவட்டார கிராமங்களில் சாகுபடி செய்துள்ள நெல், பருத்தி, மக்காச்சோளம், உளுந்து ஆகிய பயிர்கள் தற்போது அறுவடை தருணத்தில் உள்ளது.இப்பகுதியில் முக்கிய நன்செய் பயிரான சம்பா பருவத்தில் நடவு செய்த நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பருத்தி செடிகளில் முற்றிய காய்கள் வெடித்து பஞ்சு வெளிப்பட்டு வருகிறது.மக்காச்சோள பயிர்களில் கதிர்கள் முற்றிய நிலையில் காணப்படுகிறது. மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து செடிகளும் விளைந்து அறுவடை செய்யும் பருவத்தில் உள்ளது.
இத்தருணத்தில் நேற்றுமுன்தினம் தியாகதுருகம் பகுதியில் பரவலாக மழை பெய்தது.நேற்றும் மேகமூட்டத்துடன் லேசான தூரல் விழுந்தது.மேலும் சில தினங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம்அறிவித்துள்ளது. அறுவடை தருணத்தில் மழை பெய்வது பயிர்களின் மகசூலை கடுமையாக பாதிக்கும்.அறுவடை செய்த நெல், பஞ்சு, உளுந்து, மக்காச்சோளம் மணிகளை உலர்த்த முடியாமல் தவித்து வருகின்றனர்.இதனால் அவைகளின் தரம் குறைந்து எதிர்பார்த்த விலை கிடைக்காது.மழை தொடர்ந்தால் விளைபயிர்கள் நனைந்து அதிக அளவில் நஷ்டம் ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE