விழுப்புரம்: தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, விழுப்புரத்தில் அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார்.விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., சக்கரபாணி, டி.ஆர்.ஓ., (பொறுப்பு) சரஸ்வதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபாகரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் பாலகிருஷ்ணன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளிரகுராமன், மாவட்ட மொத்த பண்டகசாலை தலைவர் பசுபதி, நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் சண்முகம், தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி பேசியதாவது:மறைந்த முதல்வர் ஜெ., பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கினார். இதையடுத்து, கடந்த ஆண்டு முதல்வர் பழனிச்சாமி, பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கினார். இந்தாண்டு, கொரோனாவால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், யாரும் கோரிக்கை வைக்காமேலயே தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, பொங்கல் பரிசு ரூ.2,500 அறிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டத்தில் 5.85 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக, விழுப்புரம் மாவட்டத்திற்கு 156.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். விழாவில் அ.தி.மு.க., நகர செயலாளர் பாஸ்கரன், துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில், மாவட்ட ஜெ., பேரவை தலைவர் ராமதாஸ், நகர தலைவர் கோல்டு சேகர், நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE