சேலையூர்:சேலையூரில், கேக் கிடைக்காத ஆத்திரத்தில், பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி, கடையை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி, அட்டூழியத்தில் ஈடுபட்ட கும்பலால், பரபரப்பு ஏற்பட்டது.
கிழக்கு தாம்பரம், செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், முருகன், 30. இவர், சுத்தானந்த பாரதி தெருவில், பேக்கரி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில், இவரது கடைக்கு வந்த, நான்கு பேர் கும்பல், புத்தாண்டு கொண்டாட, கேக் கேட்டுள்ளனர்.உரிமையாளர் முருகன், கேக் இல்லை எனக் கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த அவர்கள், தகராறில் ஈடுபட்டு, கத்தியால் தாக்கியுள்ளனர். இதில், முருகன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், சேலையூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தார். இந்நிலையில், அதே கும்பல் நேற்று காலை, 6:40 மணியளவில், பேக்கரியை தீயிட்டு கொளுத்தி உள்ளனர்.
இது குறித்து, முருகன் காலை, 9:00 மணியளவில், சேலையூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்த நிலையில், கடையை எரித்த நான்கு பேரும், அவர்களாக முன்வந்து, காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
விசாரணையில், இரும்புலியூர் அடுத்த அந்தோணியார் தெருவைச் சேர்ந்த, பிலிப்ஸ் கிளமெண்ட், 19, கணபதிபுரம், அசோக்நகரைச் சேர்ந்த, லோகேஷ், 19, மேற்கு தாம்பரம், எம்.இ.எஸ்., சாலையைச் சேர்ந்த, தனுஷ், 19, மற்றும் 18 வயது சிறுவன் என தெரிந்தது. போலீசார் நான்கு பேரையும், கைது செய்தனர்.
கோட்டைவிட்ட போலீஸ்
அதிகாலை, 2:00 மணியளவில், முருகன் புகார் அளித்தும், சேலையூர் போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை, கைது செய்யாமல் விட்டதே, கடை எரிந்து நாசமானதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE