திருக்கோவிலுார்: 'தி.மு.க., ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்டு வந்த கடன் அ.தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்டு விட்டது' என தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., பேசினார்.
மணம்பூண்டி அடுத்த ஆடூர்கொளப்பாக்கத்தில் தி.மு.க.,வின் மக்கள் சபை கூட்டத்தில் அவர் பேசியதாவது:கடந்த தி.மு.க., ஆட்சியில் நான் அமைச்சராக இருந்த போது இந்த பகுதிகளுக்கு விடப்பட்ட அரசு பஸ்கள் இன்று நிறுத்தப்பட்டு விட்டது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்ட நிதி, அ.தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது.தற்போது பா.ஜ., அரசுக்கு காவடி துாக்கும் பழனிசாமி அரசு, மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ஆதரித்து வருகிறது.கருணாநிதி விவசாயிகளுக்காக 7,000 கோடி கடனை தள்ளுபடி செய்தார். உழவர் சந்தைகளைக் கொண்டு வந்தார். இலவச மின்சாரம் தந்தார்.தமிழகத்தில் இட ஒதுக்கீடாக இருந்தாலும், விவசாயிகளின் நலனாக இருந்தாலும், பெண்கள், இளைஞர்கள், மாணவர்களின் முன்னேற்றமாக இருந்தாலும் அனைத்தும் தி.மு.க., ஆட்சியில் கிடைக்கப் பெற்றவை.தி.மு.க., ஆட்சிக்கு வந்து, ஸ்டாலின் முதல்வர் ஆனதும் உங்கள் அடிப்படை கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.இவ்வாறு பொன்முடி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE