பொது ஏலம் நடந்த பிறகு கடை ஒதுக்கீட்டில் முன்னுரிமை கூடாது என விழுப்புரம் நகராட்சியின் முடிவிற்கு, ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கடைகள் மற்றும் மேலும் கட்டப்பட்டுள்ள 78 கடைகளை வாடகைக்கு விட 2 மாதம் முன்பு, பொது ஏலம் நடைபெற்றது.
முதல் ஏலத்தில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் கவுன்சிலர் அகமது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரர் (அகமது) ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்க விழுப்புரம் நகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.அதன்படி ஏலத்தில் பங்கேற்ற அகமது, 4 மற்றும் 7 ஆகிய இரண்டு கடைகளை மாத வாடகைக்கு எடுத்தார்.இந்நிலையில், அந்தக் கடைகளை ஏற்கனவே நடத்தி வந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்து, விழுப்புரம் நகராட்சி கமிஷனர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
பொது ஏலம் நடந்து அதிகபட்ச தொகை அடிப்படையில் அகமதுவிற்கு இரண்டு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, அந்த கடைகளை ஏற்கனவே நடத்தி வந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க விழுப்புரம் நகராட்சி கமிஷனர் முடிவு எடுத்திருப்பது சட்டப்படி சரியல்ல என்று கூறி, அகமது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நீலகண்டன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விழுப்புரம் நகராட்சி கமிஷனர் முன்னுரிமை கொடுக்க எடுத்த முடிவினை செயல்படுத்தக்கூடாது என்று இடைக்கால தடை உத்தரவு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-நமது சிறப்பு நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE