சின்ன பையனின் விளையாட்டு!
'முதல்வர் பதவியில் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் போலிருக்கிறது. பீதியை கிளப்பி விடுவதே, இவர்களது வேலையாகி விட்டது' எனக் கதறுகிறார், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார். கடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், கூட்டணி கட்சியான, பா.ஜ.,வை விட குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது. ஆனாலும், பெருந்தன்மையுடன், முதல்வர் பதவியை நிதிஷ் குமாருக்கே விட்டுக் கொடுத்தது, பா.ஜ., இதனால், 'டம்மி முதல்வர்' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், நிதிஷ் குமாரை கிண்டலடித்து வருகின்றனர். உள்ளுக்குள் எரிச்சல் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல், தான் உண்டு, தன் வேலை உண்டு என, நிதிஷ் குமார், பொழுதை கழித்து வருகிறார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி, அவரது நிம்மதியை கெடுக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார்.
'ஐக்கிய ஜனதா தளத்துக்கும், பா.ஜ.,வுக்கும் மோதல் அதிகரித்து விட்டது. நிதிஷ் குமார் மீது அதிருப்தியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஏராளமான தலைவர்கள், எங்கள் கட்சிக்கு வரவுள்ளனர்' என, தேஜஸ்வி யாதவ், சமீபத்தில், தீயை பற்ற வைத்தார். இந்த விஷயம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரிடையே, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத நிதிஷ் குமார், 'நன்றாக இருக்கும் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதே, தேஜஸ்விக்கு வேலையாகி விட்டது. சின்ன பையன், ரொம்பத் தான் விளையாடுகிறான்' என, கடும் கோபத்தில் உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE