வீட்டுல பசங்க மொபைல்போனும் கையுமா, மணிக்கணக்கில் உட்கார்ந்திட்டு இருக்காங்களா? அதைப் பார்த்து நீங்களும், ஆஹா... நம்ம பையன் எப்படி 'ஆன்லைன்' பாடம் படிக்கிறான்' அப்படினு புளங்காகிதம் அடையறீங்களா? அப்போ, இந்த எச்சரிக்கை உங்களுக்குத் தானுங்க...
கொரோனா வந்ததும், மொத்த பொழப்பையும் பொரட்டி போட்ருச்சு! அதிலயும் பள்ளிக்கூட பசங்கள கைலயே பிடிக்க முடியல.பள்ளிக்கூடம் போகம 'ஆன்லைன்' வகுப்புன்னு 'உள்ளங்கை உலகமா' மாறி, ஸ்மார்ட் போனில் தான் பாடம் படிக்கறாங்க.'பசங்க எந்நேரமும் நம்ம கண்ணு முன்னாடியே இருக்காங்க... நோய் தொற்று அபாயத்தில இருந்து பாதுகாப்பா வீட்டுக்குள்ளேயே இருக்கறது' நிம்மதிய கொடுக்குது.அதே சமயம், இந்த சுதந்திரமும், இணைய உலகின் 'விர்ச்சுவல்' வாழ்வும் பசங்க கிட்ட எந்த மாதிரியான பாதிப்ப ஏற்படுத்தி இருக்குனு எத்தனை பேரு யோசனை பண்றோம்?
ஸ்மார்ட் போனை, படிப்புக்காக மட்டும் பயன்படுத்துற பசங்க எத்தனை பேர் இருக்காங்கனு சொல்ல முடியுமா? ரொம்ப கஷ்டம்...!நிதர்சனம் என்ன?வெளியில் இயல்பு வாழ்க்கை திரும்பி, பெற்றோர் தங்கள் தொழில்ல கவனம் செலுத்த துவங்கிட்டாங்க. வீட்டுல பொழுது போகாம இருக்கற சிறுவர்கள், ஸ்மார்ட் போன்களில் 'ஆன்லைன்' கேம்கள் விளையாடுவதை வழக்கமாக்கியுள்ளனர். காலை துவங்கி, இரவு வரை நாள் முழுக்க மொபைல்கேம்களில் மூழ்கிப் போகின்றனர்.
இப்படி பொள்ளாச்சி பகுதியில் நுாற்றுக்கணக்கான சிறுவர்கள் மொபைல் கேம்களுக்கு அடிமையாகியுள்ளனர்.இந்த பழக்கம் சிறுவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.மணிக்கணக்கில் மொபைல், கம்ப்யூட்டர் கேம்கள் விளையாடும் போது, மூளை, கண்கள், கைகள் மிக வேகமாக செயல்படுகின்றன. இது, மூளையில் விரும்பத்தகாத வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.இருதய துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் சுவாச வேகத்தை அதிகரிக்கிறது. விளையாட்டில் ஜெயித்தாக வேண்டும் என்ற வெறியுடன் திரும்பத் திரும்ப விளையாடும் போது, அது கடுமையான மன அழுத்தத்தை உருவாக்குகிறது. மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.பல மணி நேரம் தொடர்ந்து மொபைல் போனில் வேகமாக நகரும் காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது, விழித்திரை பாதிக்கப்படுகிறது.
இப்படி, சிறுவர்களை அடிமையாக்குவதால், மத்திய அரசு 'பப்ஜி' உள்ளிட்ட சில விளையாட்டுகளை தடை செய்தது. ஆனால், அதற்கு மாற்றாக, 'ப்ரீ பயர்' 'கால் ஆப் டியூட்டி' என எத்தனையோ விளையாட்டுகள் இணைய வெளியில் கொட்டிக் கிடக்கின்றன.அவற்றை கண்டறிந்து சிறுவர்கள் தொடர்ந்து விளையாடுகின்றனர். இந்த மொபைல் கேம் மோகம், சிறுவர்களின் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும், மனநிலையையும் பாதிக்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.
நேரம் செலவிடுங்க!
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் ெஹலினா கூறியதாவது:பொதுவாக, மனித மூளையில் சுரக்கும் 'செரட்டோனின்' 'டோபமைன்' உள்ளிட்ட சுரப்பிகள், மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றன. இந்த சுரப்பிகள் இயல்பாகவே குறைவாக சுரக்கும் குழந்தைகள், எளிதில் இது போன்ற கேம்களுக்கு அடிமையாகி விடுகின்றனர்.அவர்களுக்கு, கேம் விளையாடும் போது அந்த சுரப்பிகள் துாண்டப்பட்டு, மகிழ்ச்சி கிடைக்கிறது. மற்ற நேரங்களில், மனம் சோர்ந்து போகின்றனர்.
இதுவே அவர்களை திரும்ப திரும்ப மொபைல் கேம் விளையாட துாண்டுகிறது.நாடு முழுக்க நடத்தப்பட்ட ஆய்வில், 41 சதவீதம் இளைஞர்கள் இது போன்ற கேம்களுக்கும், 40 சதவீதம் பேர் சோஷியல் மீடியாக்களுக்கும், 23 சதவீதம் பேர் பல்வேறு இணைய தளங்களுக்கும், 27 சதவீதம் பேர் ஆபாச இணைய தளங்களுக்கும் அடிமையாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.இது கவலைக்குரிய விஷயம்.
ஏறத்தாழ ஒரு ஆண்டு காலம், மொபைல் போன், கேம்கள், இணைய தளம் என மூழ்கிக் கிடக்கும் சிறுவர்கள், நாளை பள்ளிகள் திறக்கப்பட்டால், வகுப்பு வாழ்க்கையை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது பெரிய கேள்விக்குறி தான்.
அவர்களை இந்தப் பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வர, பெற்றோர்கள் தான் கவனம் செலுத்த வேண்டும். ஒரே நாளில் இதை மாற்ற முயன்றால், குழந்தைகள் முரண்டு பிடிப்பார்கள்; பாதிப்பை அதிகரிக்கும்.மெல்ல மெல்ல மொபைல் போனில் செலவிடும் நேரத்தை குறைத்து, உடல் சார்ந்த விளையாட்டுகள், புத்தக வாசிப்பு என கவனத்தை திருப்ப வேண்டும்.செல்லப் பிராணிகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்துவது இதற்கு பெரிதும் உதவும். மொத்தத்தில், பெற்றோர் தங்கள் அக்கறை, அன்பு, பொறுமை குறிப்பாக தங்கள் நேரத்தை குழந்தைகளுக்காக செலவிட வேண்டிய தருணம் இது!
குழந்தைகளை செல்போன் ஆதிக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வருவது சிரமமாக இருந்தால், குழந்தைகள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டு அடம் பிடித்தால், மனநல மருத்துவரை அணுக தயங்க வேண்டாம்.இவ்வாறு, டாக்டர் ெஹலினா தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE