வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பது, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விஷயமாகும். அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப, ஜாதி நாய்க்குட்டிகள், வண்ண வண்ண பறவைகள், தொட்டி அமைத்து வண்ண மீன்கள் வளர்க்க, பெற்றோரும் ஒத்துழைப்பது வழக்கம்.இப்படி, செல்ல பிராணி பிரியர்களின் தேவைகளை நிறைவேற்ற, பிராணிகள் மற்றும் அவற்றை பராமரிக்க தேவையான பொருட்களை விற்பனை செய்வது ஒரு லாபகரமான தொழிலாக வளர்ந்துள்ளது.பொள்ளாச்சி போன்ற சிறு நகரங்களில் கூட, பலரும் அத்தொழிலில் முழு நேரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இருந்ததை விட, தற்போது வளர்ப்பு பிராணிகளின் விலை இரு மடங்கு அதிகரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஜாதி நாய்க்குட்டி ரகங்களின் விலை மலைக்க வைக்கிறது.கடந்த ஆண்டு வரை, 1,000 - 1,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட பொமரேனியன் நாய்க்குட்டி, தற்போது, 6,000 ரூபாய் விலை சொல்லப்படுகிறது. ஜெர்மன் ெஷப்பேர்டு, லேபரேட்டர், ராட் வெய்லர், டாபர் மேன் உள்ளிட்ட பிரபலமான வெளிநாட்டு நாய்க்குட்டி ரகங்கள், 15 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் விலை கூறப்படுகிறது.நாட்டு நாய்களில் பிரசித்தி பெற்ற கோம்பை, ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை ரகங்களின் விலையும் அதிகரித்து, 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதே போல், லவ் பேர்டஸ், வண்ண மீன்கள் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.செல்லப்பிராணி பிரியர்கள் கூறுகையில், 'இது வரலாறு காணாத விலையேற்றம் எனக் கூறலாம். நாய்க் கண்காட்சியில் பங்கேற்ற தகுதியான, சான்றிதழுடன் உள்ள நாய்க்குட்டிகள் மட்டுமே அதிக விலை கூறப்படும். தற்போது, எவ்வித சான்றிதழும் இல்லாத நாய்களும் அதிக விலைக்கு விற்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. அவற்றை வாங்கும் போது, நாய்களின் ரகங்கள் குறித்த உத்தரவாதம் கிடையாது. கவனமாக இருக்க வேண்டும்,' என்றனர்.செல்லப்பிராணிகள் விற்பனையாளர்கள் கூறுகையில், 'கொரோனா காலத்தில் பள்ளிகள் செயல்படாமல், வீட்டிலேயே இருக்கும் சிறுவர்களிடையே செல்லப்பிராணிகள் வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. விற்பனையும், தேவையும் அதிகரித்துள்ளதால், விலையும் அதிகரித்துள்ளது.பெற்றோரும், குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற, அதிக விலை கொடுத்து செல்லப் பிராணிகள் வாங்கிக் கொடுக்க தயாராக உள்ளனர். பல ஆண்டுகளாக இத்தொழிலில் உள்ள, நன்மதிப்பு பெற்ற விற்பனையாளர்கள், தவறான ரகங்களை விற்பனை செய்து, பெயரை கெடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால், பிரபலமான கடைகளை அணுகுவது நல்லது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE