புதுடில்லி:டில்லியில், 15 ஆண்டுகளுக்கு பின், கடும் குளிர் நிலவியது. மூடுபனி காரணமாக, பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டில்லியில், ஆங்கிலப் புத்தாண்டு தினமான நேற்று, குளிர் மிக கடுமையானதாக இருந்தது. மூடுபனி அதிகமாக இருந்ததால், பொது இடங்களில், அருகில் இருப்பவரைக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:டில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை, 1.1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. கடந்த, 2006ம் ஆண்டு, ஜன., மாதம், 0.2 டிகிரி செல்சியஸ் என, மிகக் குறைந்த வெப்பநிலை பதிவானது. இதன்படி, 15 ஆண்டுகளுக்கு பின், தற்போது மிக குறைவான வெப்பநிலை பதிவாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஜன., மாதம், மிக குறைந்த வெப்பநிலை, 2.4 டிகிரி செல்சியஸ் என, பதிவாகி இருந்தது.சப்தர்ஜங் பகுதியில் நேற்று காலை, 6:00 மணிக்கு, அருகில் இருப்பவரை பார்க்க முடியாத வகையில், மூடுபனி மிக கடுமையாக இருந்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் வாகன போக்குவரத்து முடங்கியது.
இந்தநிலை, வரும், 6ம் தேதி வரை நீடிப்பதுடன், குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் குறைவாக பதிவாகும் என, தெரிகிறது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு, லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE