பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், அவ்வப்போது திடீர் மழை, பகலில் மேகமூட்டம், இரவில் பனிப்பொழிவு என, குழப்பான பருவநிலை நிலவுவதால், பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தென்மேற்கு பருவமழை காலம். அதன்பின், மூன்று மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலம். டிச., முதல் பிப்., வரை பனிக்காலம். அதன்பின், கோடை காலம்.இந்த பருவநிலைகளை கணக்கிட்டுத் தான் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்கின்றனர். அவ்வப்போது நிகழும் பருவநிலை மாற்றங்களால், மழை தாமதமாவதுடன், பருவம் தவறி மழை பெய்கிறது. இது, விவசாயத்தை பாதிக்கிறது.பனி காலத்தில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது திடீர் மழை பெய்கிறது. பகலில், வானம் மேகமூட்டத்துடன் வெயில் இன்றி காணப்படுகிறது. இரவு நேரத்தில் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. இதனால், அறுவடை செய்த நிலக்கடலை, தேங்காய் கொப்பரை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை உலர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டு, உணவு எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.அடுத்த பருவத்துக்கு விதைக்க, பயிர் விதைகளை பக்குவப்படுத்துவதும் பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் உள்ளிட்ட குறுகிய கால பயிர்களில், பூச்சி, நோய் தாக்குதலும் அதிகரித்துள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE