தாயிற் சிறந்த கோவிலுமில்லைதந்தை சொல் மிக்கமந்திரமில்லை,ஆயிரம் உறவில் பெருமைகளில்லை..அன்னை தந்தையே அன்பின் எல்லை...என்ற பாடல் வரிகளை கேட்கும் போதெல்லாம், பெற்றோரின் அருமை, பெருமை விளங்க வைக்கும். தாய்ப்பாலோடு, பாசத்தையும் ஊட்டி வளர்க்கும் அன்னையும், அன்போடு அறிவையும் தந்த தந்தையும், நாம் அறிந்த முன்னறி தெய்வங்கள்.பெற்றெடுத்து பேர் வைத்து, கலைகள் பல கற்றுக்கொடுத்த விருட்சமாய் நம்மை ஆளாக்கி விட்டவர்களுக்கு, அனுதினமும் ஆராதனை செய்யவேண்டும். பிறந்த வீட்டில் இருந்து திருமணம் ஆகி புகுந்த வீடு சென்றாலும், பெற்றோர், உடன் பிறந்த சகோதரர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, நல்ல உறவுடன் இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்.பிறந்த வீட்டின் உறவுகளுடன் அன்பு வளரவும், அவர்களின் ஆசிகள் கிடைக்கவும், பாதபூஜை செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர், பல்லடம், சூலூர் பகுதியை சேர்ந்த கொங்கு வேளாளர் சமுதாய குழாயங்குல பெண்கள். தங்கள் குடும்பத்துடன் வந்திருந்த அப்பெண்கள், நீலம்பூர் வேடசாமி கோவிலில் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உடன்பிறந்த சகோதரர்களுக்கு, சந்தனம், குங்குமம் கொடுத்து, மாலை அணிவித்து, மேளதாளத்துடன் அழைத்து வந்து, பாதபூஜை செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி, அவர்களின் ஆசியை, கணவன் மற்றும் குழந்தைகளோடு பெற்று மகிழ்ந்தனர்.இதுகுறித்து பெண்கள் கூறுகையில், 'தற்போதைய நிலையில், இளைய தலைமுறைக்கு அன்பை, பண்பை போதிக்க, பெரியவர்களின் வழிகாட்டுதல் அவசியம். இன்றைய அவசர உலகில் அதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. அதை மீட்டெடுக்கும் முயற்சியாக, பெண்கள் ஒன்றாக திரண்டு, பெற்றோர், சகோதரர்களுக்கு பாதபூஜை செய்து அவர்களின் ஆசி பெற்றோம். அவசர உலகில் உறவுகள் மேம்பட இதுபோன்ற சந்திப்புகள் அவசியம். யாருக்கு யார் என்ன உறவு என் தெரிந்து கொள்ளவும், நமது பாரம்பரியம், பண்பாடுகள் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், உற்றார், உறவினர்களுடன், எங்கள் குழந்தைகள் கூச்சம் இல்லாமல் பழகவும் இது வாய்ப்பாக அமைந்தது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE