உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஏ.சி.ராஜன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
நம் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு, தமிழக அரசு இந்த ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது. இது, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு வேண்டுமானால், மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் பொதுமக்களுக்கு, இது அதிர்ச்சியாகத் தான் உள்ளது.
'கொரோனா' தாக்குதலுக்கு உள்ளாகி, ஓராண்டு நெருங்கும் சூழலில், நம் நாடு இன்னும் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? எதிர்வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அரசியல் நோக்கம் கருதியே, அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது என்பதே உண்மை. நீங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, மக்கள் பலிகடா ஆக வேண்டுமா?
'கட்டுப்பாட்டுடன் ஜல்லிக்கட்டு நடத்தலாம்' என, அரசு கூறியுள்ளது. எது கட்டுப்பாடு?ஒரு ஜல்லிக்கட்டு மாட்டை, குறைந்தது, 10 பேர் அழைத்து வருவர். அந்த வகையில், ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில், குறைந்தப்பட்சம், 600 மாடுகள் பங்கேற்கும்; அப்படி என்றால், 6,000 பேர் வருவர். மேலும் மாடுபிடி வீரர்கள், குறைந்தது,
1,000 பேர்; பார்வையாளர்கள், பல ஆயிரம் பேர் என, குறிப்பிட்ட இடம் மக்களால் நிரம்பும். இது தவிர காவல், சுகாதாரம், வருவாய், கால்நடை துறைகளின் ஊழியர்கள், அங்கு முகாமிடுவர்.பல்லாயிரக்கணக்கானோர் கூடும் போது, அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை, யாராலும் கடைப்பிடிக்க முடியுமா? அல்லது அரசால் தான் கட்டுப்படுத்த முடியுமா? அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம், எதிர்வரும் தேர்தல் தானா?
'ஜல்லிக்கட்டு போட்டி, பாரம்பரியம்' என, சிலர் துாண்டிவிடுவர். கொரோனா துவங்கியது முதல், இன்று வரை நாடு முழுதும் வழக்கம் போல் நடக்கும், எந்த ஒரு பாரம்பரிய நிகழ்வுகளும் நடக்கவில்லை. மதுரை சித்திரைத் திருவிழாவும் நடக்கவில்லை. ஏனென்றால் விழாக்களை விட, உயிர் வாழ்தல் முக்கியம்.

கொரோனா பரவலைத் தடுக்க, இந்த ஒரு ஆண்டு மட்டும், ஜல்லிக்கட்டு நடத்தாமல் இருக்க முடியாதா? ஜல்லிக்கட்டு வேண்டாம் எனச் சொல்லவில்லை; இத்தகைய கடுமையான சூழலில் அந்த நிகழ்ச்சி அவசியமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். கொரோனா பரவல் இல்லாத நிலை வந்த பின், தாராளமாக ஜல்லிக்கட்டு நடத்தலாமே. மக்களின் பாதுகாப்பு கருதி, அரசு நடவடிக்கை எடுக்குமா?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE