வாலிபரை வெட்டிய கும்பலுக்கு வலை
ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் விமல்ராஜ், 24. நேற்று முன்தினம் இரவு, அம்பேத்கர் நகர், முதல் தெருவில், தன் உறவினர் தீபக், 19, என்பவருடன் டூ - வீலரில் சென்றார். அங்கு, சாலையின் நடுவே, 'கேக்' வெட்டிய கும்பல் ஒன்று, விமலுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக வெட்டி தப்பியது.குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், மேல் சிகிச்சைக்காக, ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆதம்பாக்கம் போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக சம்பவம் நடந்தது தெரிய வந்தது. போலீசார் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
எலக்ட்ரீஷியன்களுக்கு அரிவாள் வெட்டு
செங்குன்றம்: செங்குன்றம், எல்லையம்மன் பேட்டையைச் சேர்ந்தவர் சுபாஷ், 21. அதே பகுதி, பெருமாள் நகரைச் சேர்ந்தவர் விஜய், 20; இருவரும் எலக்ட்ரீஷியன்கள். நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து, இருவரும் எல்லையம்மன்பேட்டை பிரதான சாலையில் சென்றபோது, ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் நால்வர், அவர்களை வழிமறித்து, அரிவாளால் வெட்டி தப்பினர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன், இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆட்டோ ஓட்டுனர் மீது தாக்கு
தாம்பரம்: திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர், ரமேஷ், 35; ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, பெருங்களத்துாரில் உள்ள, 'டாஸ்மாக்' கடையில், மது அருந்தியுள்ளார். பின், பெருங்களத்துார் ரயில் நிலைய, நடைமேடையில் துாங்கினார். அதிகாலை, 1:00 மணியளவில், அவ்வழியாகசென்ற, 20 வயது மதிக்கத்தக்க, அடையாளம்தெரியாத வாலிபர் ஒருவர், ரமேஷிடம், 'ஹெட் செட்'டை பறிக்க முயன்றார். அதை தடுக்க முயன்றபோது, அந்த வாலிபர், ரமேஷை பிளேடால் முகத்தில் வெட்டி, தாக்கி தப்பியுள்ளார். இது குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
மோசடி பேர்வழிகளுக்கு 'குண்டாஸ்'
சென்னை: கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்தவர் பாலவிஜய், 35; கார் பந்தய வீரர். இவர், நீலாங்கரையைச் சேர்ந்த தன் கூட்டாளிகள், முகமது முசாமில், 34; அய்யாதுரை, 32, ஆகியோருடன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட, ஐந்து வங்கிகளில் போலி ஆவணங்கள் வாயிலாக, 3.80 கோடி ரூபாய், கார் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார். மூவரையும் கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர். இவர்களில், முகமது முசாமில் மற்றும் அய்யாதுரை ஆகியோரை, கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவின்படி, குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.
சூதாடிய 16 பேர் கைது
பெரியமேடு: பெரியமேடு, பட்டுநுால் சர்தார் தெருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், சூதாட்டம் நடப்பதாக, பெரியமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட விடுதியில் சோதனை செய்ததில், பெரம்பூரைச் சேர்ந்த வசிம் முல்லா ஷெரீப், 42, புளியந்தோப்பு அகமது உசேன், 38, உட்பட, 16 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார், 38 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.வாலிபர் துாக்கிட்டு தற்கொலைகே.கே.நகர்: கே.கே.நகர், விஜயராகபுரத்தைச் சேர்ந்தவர், விஜயகுமார், 25. இவர், அதே பகுதியில் உள்ள, காஸ் ஏஜன்சியில் பணி புரிந்தார். இவர், காஸ் முன்பதிவு செய்த நபர்களிடம் பணம் பெற்று, முன்னதாக, சிலிண்டர் வினியோகம் செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து, பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், மன வருத்தத்தில் இருந்த விஜயகுமார், நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த, கே.கே.நகர் போலீசார், அவரது உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.வட மாநில வாலிபர் மீது தாக்குசெங்குன்றம்: பீஹார் மாநிலத்தை பூர்வீகமாகக்கொண்டவர் ராஜேஷ் ராம், 32. இவர் செங்குன்றம், வடகரையில் உள்ள ரைஸ் மில்லில் தங்கி பணி புரிகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, புத்தாண்டு கொண்டாடியபோது, அங்கு சென்ற, ஆறு பேர் கும்பல், அவரை அரிவாளால் வெட்டி தப்பியது. இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE