சென்னை : சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில், சினிமா உதவி இயக்குனர் படுகொலை செய்யப்பட்டார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ருத்ரன், 25. இவர், சென்னை, வளசரவாக்கத்தில் தங்கி, சினிமா துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவர், நண்பர்களுடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு, தன் அறையில், புத்தாண்டை கொண்டாட முடிவு செய்தார்.அங்கு, போதிய இடவசதி இல்லாத காரணத்தால், போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள, மற்றொரு உதவி இயக்குனர் மணிகண்டன், 24, என்பவர் வீட்டிற்கு, நள்ளிரவு சென்றனர்.அங்கு, நண்பர்கள் குருசஞ்சய், ராம்குமார் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி, கேக் வெட்டி, புத்தாண்டை கொண்டாடினர்.
அப்போது, மணிகண்டனுக்கும், ருத்ரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ருத்ரனை, மணிகண்டன் ஆபாசமாக பேசியதாகவும், ஆத்திரமடைந்த ருத்ரன் மணிகண்டன் முகத்தில் குத்தியதில், நெற்றியில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், வீட்டிற்குள் சென்று, கத்தியை எடுத்து வந்து, ருத்ரன் வயிற்றில் குத்தினார்.இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ருத்ரனை, நண்பர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், ருத்ரன் இறந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த, மாங்காடு போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.புத்தாண்டு கொண்டாட்டத்தில், உதவி இயக்குனரை, மற்றொரு உதவி இயக்குனர் கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE