சின்னஞ்சிறு பெண்போலே வித்யா கல்யாணராமன் ஏ.வி.ரமணன், வெகு விமரிசையாக அந்நாளில், சன் 'டிவி'யின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் பாடியது நினைவில் நிற்கிறது. அன்று, 'இதயக்கமலமாக' வந்தது கே.வி.மகாதேவன் இசையில் உதித்த, 'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...' என்ற பாடல்.
இதே நபர் இன்று, இசையில் நன்கு பக்குவப்பட்ட விதுஷியாக, நாத இன்பத்தில் கச்சேரி செய்து கொண்டிருந்தார். எல்.ராமகிருஷ்ணன் வயலினிலும், ஜே.வைத்தியநாதன் மிருதங்கத்திலும், சந்திரசேகர சர்மா கடவாத்தியத்திலும் பக்க பலம்.வர்ணத்திற்குப் பிறகு வந்த சுவாமிநாத பரிபாலயாசுமாம் என்ற நாட்டை, தீக் ஷிதர் உருப்படிக்கு நிறையவே கற்பனை ஸ்வரங்கள். அடுத்து இவர் அளித்தது, வம்சீநாதம் ஸ்ரவணமதுரம் என்று மோஹனத்தில் ஒரு ஸ்லோகம். உடன் எண்ணிய பாட்டை எடுக்காமல், வயலினுக்குக் கொடுத்ததில் பெரிய அர்த்தமில்லை. ஒரு வாத்தியத்தில், ஸ்லோகத்தின் சாஹித்யத்தைக் கொண்டுவர இயலுமா?
இதில், இணைந்த பாடல் தீக் ஷிதரின், 'ராஜகோபாலம்' என்பது. துரிதகதியில் அமைந்துள்ள, 'பாரிஜாத தருமூலம்' எனுமிடத்தில் ஸ்வரம்.சஹானா ஆலாபனை பொருத்தத்திலும் பொருத்தம். அதிகம் புழக்கத்தில் இல்லாத, 'ஊரகே கல்குனா' என்ற ராம பக்தி எங்கெல்லாம் உருவாகும் என்பதை விளக்கும், தியாகராஜ கிருதி பாடப்பட்டது.
பூர்விகல்யாணி மெயின். ராக விவரணையில் ஒரு, இரண்டு மணி நேரக் கச்சேரியில் கொடுக்க இயலும் அம்சங்கள் எல்லாவற்றையும், அது பிருகாவாகட்டும், கார்வையாகட்டும், ஸ்ருதியுடன் ஒன்றி நிறுத்தலாகட்டும், இவையெல்லாம் சீர்படக் கொடுத்து, ஒரு மனநிறைவை நமக்குத் தந்தார்.
இது நிற்க, அடக்கிப் பாடும் போது, இவர் நமக்களிக்கும் சுகானுபவம், விட்டுப் பாடும் போது இல்லாமல் போகிறதோ என்ற ஒரு ஐயம் நமக்கு மனதில், எங்கோ ஒரு மூலையில்! வந்த பாடல் அதிகம் கேட்டிராத, மைசூர் வாஸுதேவாசாரின், 'மறசிதிவேமோ நன்னு' என்பதாகும். நிரவலும், கல்பனைஸ்வரங்களும், 'கதியனி நிஜமுக ஸததமு ஸரஸிஜ லோசன' எனுமிடத்தில். இந்த வரியை எப்படி வேண்டுமானாலும் பிரித்துப் பாடலாம்! வயலினிஸ்ட் எல்.ராமகிருஷ்ணன், எந்த நாட்களில், வயலினிற்கும், தனக்கும் ஓய்வளிக்கிறார் என்று அறிய ஆவல். இவர், துாணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருப்பார் எனக்கொள்ளும்படி தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்கிறார்.
அபரிமிதமான கற்பனா சக்தி வேண்டும்; மெயின் கலைஞரின் போக்கை அனுசரித்தும் மிகாமலும் இருக்க வேண்டும். இதெல்லாம் ஒரு கலைக்குள்ளே மற்றுமொரு கலை. எந்தவித சோடையும் இல்லை. பூர்விகல்யாணி, சஹானா ராகங்களின் ராகவிஸ்தரிப்புகள் வித்யாவிற்கு இணையானதாக இருந்தன.
நிறைவடையும் நேரத்தில், பட்டினத்தார் பாடல். எல்லாரும் மண்ணோடு, ஒருபிடி சாம்பலாகப் போவது உறுதி என்பதை அறுதியிட்டுக் கூறும், 'முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும்' எனும் சொற்சிந்தனையை விருத்தமாகவும், அதனுடன் இணைத்து, 'ஆடும் சிதம்பரமே' என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் பாடலையும் பாடினார். மிருதங்கம், கடவாத்தியத்தில் முறையே வைத்தியநாதனும், சர்மாவும் ஒரு நல்ல பிளானுடன் தனி ஆவர்த்தனத்தை அமைத்துக் கொண்டிருந்தனர். பகிர்தலுக்கும், பாகுபாட்டிற்கும், ஆவர்த்தனங்களை உட்படுத்தி வாசித்தனர் எனலாம்.- எஸ். சிவகுமார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE