மதுரை : நெல்கொள்முதல் நிலையங்களுக்கு பொறுப்பாளர்களாக விவசாயிகளை நியமிக்க வேண்டும் என மதுரையில் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கலெக்டர் அன்பழகன் தலைமையில் வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், நேர்முக உதவியாளர் தனலட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற் பொறியாளர் சுகுமாரன், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ், சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மண்டல மேலாளர் புகாரி, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலுார் விநாயகபுரத்திலிருந்து விவசாயிகள் கிருஷ்ணன், ராஜமாணிக்கம், பழனிசாமி: திருவாதவூர் வேப்பங்குடி கண்மாய் வாய்க்காலை துார்வார வலியுறுத்தினர். பாசன குழு தேர்தல்நடத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளை பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். கிடாரிப்பட்டி பகுதியில் பொதுப்பணித்துறை இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு சர்க்கரை நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
மதுரை கிழக்கு ஒன்றிய அலுவலகத்திலிருந்து அழகு : பெரியாறு ஒரு போக பாசன பகுதிகளில் நெல் அறுவடை துவங்கியுள்ளது. தாமதமின்றி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். மேற்கு ஒன்றியத்திலிருந்து திருப்பதி : பெரியாறு வைகை இரு பாசன கடைமடை பகுதியான வயலுார், வயிரவநத்தம் போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். வாடிபட்டி, கிழக்கு, மேற்கு ஒன்றியங்களில் நெல்கொள்முதல் நிலையங்களை தாமதமின்றி திறந்தால் தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
செல்லம்பட்டி ஒன்றியத்திலிருந்து ராமன் : முதலைக்குளம் ஊராட்சியில் 7 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.அங்கு அம்மா மினி கிளினிக் துவக்க வேண்டும். அங்கு பழுதான கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது.கட்டட வசதி செய்ய வேண்டும். விக்கிரமங்கலம் உரப்பனுார் வழியாகவிமான நிலையம் செல்லும் கால்வாய் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காலத்தில் அமைக்கப்பட்டது.அதை துார்வார வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE