சேலம்: புத்தாண்டையொட்டி, மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள், வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
புத்தாண்டு - 2021 பிறப்பையொட்டி, நேற்று முன்தினம் மதியம் முதல், சேலம் விழாக்கோலம் பூண்டது. நள்ளிரவு, 11:00 முதல், 1:00 மணி வரை, தேவாலயங்களில், அரசின் வழிகாட்டுதல்படி, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நேற்று காலை, புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது. திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். பலர், நள்ளிரவில் தங்கள் வீடுகளில் பட்டாசு வெடித்து, 'கேக்' வெட்டி, புத்தாண்டை வரவேற்றனர். நேற்று காலை, சேலம், கோட்டை மாரியம்மன், எல்லைப்பிடாரி அம்மன், அஸ்தம்பட்டி மாரியம்மன், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் தங்க கவச அலங்காரத்திலும், ராஜகணபதி முத்தங்கி அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். அதேபோல், கந்தாஸ்ரமம், ஊத்துமலை முருகன், கோட்டை பெருமாள் என, சேலம் மாநகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. அதில், திரளான பக்தர்கள், வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
அதேபோல், மாவட்டத்தில் உள்ள, ஆத்தூர் வெள்ளை விநாயகர் தங்க கவசம், வாழப்பாடி, மன்னாய்க்கன்பட்டி பிரிவு சாலையில் உள்ள பிங்கள விநாயகர் வெள்ளி கவசம்; வடசென்னிமலை பாலசுப்ரமணியர், ஆத்தூர் அறுபடை பாலசுப்ரமணியர் ராஜ அலங்காரம்; இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் உள்ள சின்னமாரியம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், தம்மம்பட்டி காசிவிஸ்வநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், பேளூர் கரடிப்பட்டி லட்சுமி நாராயண பெருமாள், இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர், மூக்கரை நரசிம்ம பெருமாள் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
பூச நட்சத்திரம்: ஆங்கில புத்தாண்டு, பூச நட்சத்திரத்தையொட்டி, தலைவாசல், வடகுமரை, சத்திய ஞான சபையில், நேற்று, சிறப்பு வழிபாடு நடந்தது. கொடியேற்றம் நடந்ததோடு, திருவருட்பா, அகவல் பாராயணம் உள்ளிட்டவை பாடப்பட்டன. இதையடுத்து, திரைகள் விலக்கப்பட்டு, ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், வாழப்பாடி, வண்ணாத்திக்குட்டை, வள்ளலார் தருமச்சாலையில், வள்ளலார் படத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE