நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் பொட்டிரெட்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, தேவராயபுரம், சேந்தமங்கலம், அலங்காநத்தம், கரியபெருமாள்புரம், எருமப்பட்டி, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில், ஜன., பிப்., மற்றும் மார்ச் மாதங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். போட்டிகள் நடைபெறும் ஒவ்வோரு கிராமங்களிலும், 100க்கும் மேற்பட்ட காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்யும் காளைகளின் கூச்சத்தை, பயத்தைப் போக்கும் வகையில், அதன் உரிமையாளர்கள் மண்ணை குத்தி மிரட்டல், பார்வையை விடுப்பது உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். நாமக்கல் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளுக்கும், காளைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அலங்காநத்தம், கோம்பக்காடு பகுதியை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளரான கோவிந்தன் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் என்னிடம் உள்ள காளைகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறேன். வருமானத்தை எதிர்பார்த்து அவற்றை நாங்கள் தயார் செய்வதில்லை, தமிழர்களின் வீர விளையாட்டில் எங்கள் காளைகளும் பங்கேற்கின்றன என்ற பெருமை கொள்கிறோம். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு இடங்களில் போட்டிக்கு அரசு தடை விதிக்கப்பட்டது. தற்போது, இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அரசு சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE