புதுடில்லி : நாடு முழுவதும் கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பூசி பணி பல்வேறு இடங்களில் துவங்கி உள்ளது. இதை வரவேற்று சமூகவலைதளமான டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர்.
உலகளாவிய தொற்றாகி போன கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்தாலும் இன்னும் முழுமையாக தீரவில்லை. புதிய வகை கொரோனா உருமாறி வருகிறது. அதேசமயம் உலகின் பல்வேறு நாடுகளில் கொரோவை தடுப்பதற்கான தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் பணியும் தொடங்கி உள்ளது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் இன்று(ஜன., 2) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கான ஒத்திகை துவங்கி உள்ளது.
முதற்கட்டமாக நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 இடங்களில் கொரோனா தொற்று தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்தது. தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில், 17 இடங்களில் நடைபெற்றது. முதற்கட்டமாக கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டுள்ளது. இதை நாடு முழுவதும் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

2020 ஆண்டு முழுவதுமே கொரோனா எனும் கொடிய நோயால் பல இன்னல்கள் நேர்ந்தது. பிறந்துள்ள 2021 துவக்கமே கொரோனாவை விரட்டும் விதமாக தடுப்பூசி உடன் துவங்கி உள்ளது. இதனால் மக்கள் பலரும் இதை வரவேற்றுள்ளனர். சமூகவலைதளமான டுவிட்டரில் #CoronaVaccine என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நாடு முழுவதும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாகவே வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதை வரவேற்றும் டுவிட்டர் வாசிகள் டிரெண்ட் செய்தனர்.
''இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது. கொரோனாவே போ... போ... தடுப்பூசியே வா... வா...''. ''இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம், இது வரவேற்ககூடிய ஒன்று''. ''2021 துவக்கத்திலேயே தடுப்பூசி ஆரம்பம். இந்த ஆண்டு எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தரும் என நம்புகிறேன்'', ''குட் பை கொரோனா, ஹேப்பி நியூ இயர் கொரோனா வாக்சின்'' போன்ற கருத்துக்கள் டுவிட்டரில் தென்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE