சென்னை: நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 5 லட்சம் விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக, வேளாண் மற்றும் தோட்டகலைப் பயிர்களுக்கு பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. நிவர் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க 641.83 கோடி ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 3108.55 கோடி ரூபாயும்., மொத்தம் 3,750.38 கோடி ரூபாய் தேவைப்படும் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு நிதியுதவி கோரப்பட்டுள்ளது. புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க 485 கோடி ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 1,029 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 1,514 கோடி ரூபாய் தேவைப்படும் என தெரிவித்து மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.

இந்த புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு,
மானாவரி மற்றும் நீர்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்பாசன வதி பெற்ற இதர பெயர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையான ரூ.13,500 என்பதை ரூ.20 ஆயிரமாக உயர்த்தியும்
மானாவரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையான ஹெட்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.7,410 என்பதை ரூ.10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும்
பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரண தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.18 ஆயிரம் என்பதை ரூ.25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த நிவாரண தொகையை தமிழக அரசு வழங்கும்.
மேலும், தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் என்ற அளவில் மட்டுமே இடுபொருள் வழங்க வழிவகை உள்ளது. இந்த பேரிடரில் அனைத்து விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள காரணத்தினால் 2 ஹெக்டேர் என்ற உச்சவரம்பை தளர்த்தி பரப்பளவு முழுவதற்கும் உச்சவரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இதனை தொடர்ந்து, நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக பாதிப்பிற்குள்ளான 3,10,589.63 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு, சுமார் 5 லட்சம் விவசாய பெருமக்களுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் வழங்கப்படும். இந்நிவாரணம், விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரும் 7 ம் தேதி முதல் நேரடியாக வரவு வைக்கப்படும் . இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE