துாத்துக்குடி: பூச்சி தாக்குதலில் பயிர்கள் சேதமடைந்ததால், தமது பேத்தியிடம் ஒருவரியில் மன்னிப்பு கேட்டுவிட்டு விவசாயி மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தத்தை சேர்ந்தவர் நாராயணசாமி 58. ராஜபாளையம் மில்லில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மனைவி மகாலட்சுமியுடன், கோவில்பட்டியில் மகள் அபிராமி வீட்டி்ல் வசித்துவந்தார். பிள்ளையார்நத்தத்தில் அவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். போதிய மழையின்மையால் அதனை அழித்துவிட்டு, உளுந்து பயிரிட்டிருந்தார்.
உளுந்தில் மஞ்சள் நோய் தாக்கியதால் மீண்டும் மக்காச்சோளம் பயிரிட்டார். அதில் படைப்புழு தாக்கியது. இதனால் மனமுடைந்தார்.தமது மகள் வழி பேத்தியான 3 வயது மித்ரா மீது அதிகம் பாசம் வைத்திருந்தார். எனவே அங்குள்ள அறையில்‛ மித்ரா மன்னித்துவிடு' என எழுதிவைத்துவிட்டு அங்குள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாலாட்டின்புதுார் போலீசார் விசாரித்தனர்.
வானம் பார்த்த பூமியான கோவில்பட்டி,கழுகுமலை, கயத்தாறு, சாத்துார் வட்டாரங்களில் கரிசல் காடுகளி்ல் இந்த ஆண்டு மகசூல் பொய்த்து பல விவசாயிகள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு தரும் 500 ரூபாய் பயிர்காப்பீடு தொகை விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்தாது என விவசாயிகள் அங்கலாய்த்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE