திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: பக்தி, ஆன்மிகம், மத நம்பிக்கைகள் எல்லாம் வெறும் சடங்குகளும், சம்பிரதாயங்களுமே தவிர, மற்றவர்களைக் காப்பாற்ற அவை ஒருபோதும், அறிவியல் கைகொடுப்பது போல் கைகொடுக்காது என்பதை மதவாதிகளுக்கும், பக்தர்களுக்கும் கொரோனா பாடமாகப் புகுத்தியிருந்தாலும், பக்திப் போதை, மதப் போதை ஏறியவர்கள், அவ்வளவு எளிதில் இதை உணருவதோ, உணர்ந்தாலும் ஒப்புக் கொள்ளுவதோ சற்றுக் கடினம் தான்.
'டவுட்' தனபாலு: அறிவியல் மட்டும் தான், எப்போதும் அனைவருக்கும் கை கொடுக்கும் என்றால், உங்களைப் போன்ற கடவுள் மறுப்பாளர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகளாகத் தானே இருந்திருக்க வேண்டும். மாறாக, வெறும், 'பேச்சாளர்'களாகத் தானே இருக்கின்றனர்... எனவே, பகுத்தறிவு என்பதெல்லாம் வெற்று பேச்சு தான் என்பதில் யாருக்கும், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: இம்முறை ஜெயிக்காவிட்டால், அதோ கதி தான் என்ற நிலையில் உள்ள, தி.மு.க., ரஜினி வரவை விரும்பவில்லை. ரஜினியை பின்வாங்க வைத்து, அதில் தி.மு.க., வெற்றி அடைந்தது. ஆனால் உண்மையில், தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது. ரஜினி அரசியலில் நின்றிருந்தால், அ.தி.மு.க.,- - பா.ஜ.,விற்கு பாதிப்பு ஏற்பட்டு, தி.மு.க.,விற்கு லாபம் கிடைத்திருக்கும்.
'டவுட்' தனபாலு: அரசியலுக்கு வர, நடிகர் ரஜினிகாந்த் திடீரென மறுப்பு தெரிவித்ததை அடுத்து, நீங்கள் கூறுவது போன்ற பல கணக்குகள் தவறாகி இருக்கின்றன. அந்த வகையில், உங்கள் கருத்தும் தவறானது தானோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வந்திருக்கும். ஏனெனில், உண்மையான காரணத்தை தான் ரஜினி கூறிவிட்டாரே!
பிரதமர் மோடி: சொந்த வீட்டில் வாழ்வது தான், மக்கள் ஒவ்வொருவரின் கனவாகவும், லட்சியமாகவும் உள்ளது. ஒருவர் சொந்த வீட்டின் கதவை திறக்கும் போது, தன் மரியாதைக்குரிய வாழ்வுக்கான கதவையும் திறக்கிறார். அதனால், சொந்த வீடு என்பது, வெறும் கட்டடம் மட்டும் அல்ல; ஒருவரின் கவுரவத்துடன் சம்பந்தப்பட்டது.
'டவுட்' தனபாலு: எட்டாண்டுகளுக்கு முன், பிரதமராக பொறுப்பேற்றதும், அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என அறிவித்தீர்கள். இன்னமும் அந்த கனவு இல்லங்கள், ஏராளமானோருக்கு, 'டவுட்'டாகத் தான் இருக்கின்றன. எனவே, மக்கள் மத்தியில் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும், பொறுப்பானவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: சட்டசபை தேர்தலுக்கு, ம.தி.மு.க., ஆயத்தமாகி வருகிறது. இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும். ம.தி.மு.க., தனிச் சின்னத்தில் போட்டியிடுவதால், வெற்றி வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்காது. அதே நேரத்தில், தி.மு.க.,வின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று யாரும் நிர்பந்திக்கவுமில்லை.
'டவுட்' தனபாலு: தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இடம்பெறுகிறது; உங்கள் கட்சியையும்சேர்த்துக் கொண்டனர் என்பது, உங்கள் பேட்டி மூலம், 'டவுட்' இன்றி தெளிவாகியுள்ளது. எனினும், எத்தனை இடங்களை உங்களுக்கு ஒதுக்கப் போகின்றனர் என்பதும், ஒன்றிரண்டு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வீர்களோ என்பதும் இன்னும், 'டவுட்'டாகவே உள்ளது.
தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி: பொய் வாக்குறுதிகளை அளிக்கும், தி.மு.க.,வை மக்கள் புறக்கணிப்பர். இந்தியாவில், மூன்றாவது பெரிய கட்சியான, அ.தி.மு.க.,வை யாராலும் தோற்கடிக்க முடியாது. தி.மு.க.,வுக்கு தைரியம் இருந்தால், கூட்டணி இல்லாமல் மக்களை சந்திக்க முடியுமா? அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டாலும், 234 தொகுதிகளில் வெற்றி பெறும்.
'டவுட்' தனபாலு: கூட்டணியில் சில குட்டி கட்சிகளை சேர்ப்பது, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிக்கு பலம் சேர்ப்பதற்காக அல்ல. கூட்டணியில் சில கட்சிகளை சேர்க்கவில்லை என்றால், பேச்சுத் திறமை வாய்ந்த கட்சிகளின் தலைவர்கள், ஊர் ஊராக சென்று, 'சீட்' தராத கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வர். அதற்கு பயந்து தான், சில கட்சிகள் கூட்டணி சேர்க்கிறதோ என்ற, 'டவுட்' உள்ளது. அதனால், நீங்கள் எதிர்பார்ப்பது நடக்காது!
தி.மு.க.,விலிருந்து, பா.ஜ., வில் சமீபத்தில் இணைந்துள்ள, கே.பி.ராமலிங்கம்: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த போது, '2ஜி' வழக்கிற்காக, மன்மோகன் சிங் அரசிடம், தி.மு.க., மண்டியிட்டு கிடந்தது. ராஜிவ் படுகொலைக்கு பழி தீர்த்துக்கொள்ள, ஒட்டு மொத்தமாக, ஈழ தமிழ் இனத்தை அழித்த காங்., அரசில், பலம் பொருந்திய கூட்டணி தலைவராக இருந்தவர் தான், தி.மு.க.,வின், டி.ஆர்.பாலு.
'டவுட்' தனபாலு: நீங்கள் தி.மு.க.,வில் நீண்ட காலம் இருந்தவர் என்பதால், நீங்கள் கூறும் தகவல்களில் பொய் இருக்காது என்ற எண்ணம், தமிழக மக்களுக்கு உள்ளது. இப்போது அவர்களுக்கு இருக்கும், 'டவுட்' எல்லாம், இவ்வளவு நடந்தும், தி.மு.க.,வுக்கு மக்கள் எப்படி ஆதரவு அளிக்கின்றனர்; தமிழ் மக்களிடம் அந்த தலைவர்களும் எப்படி ஓட்டு கேட்கின்றனர் என்பது தான்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE