தனிமனித ஆளுமை இனி சாத்தியமா?

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
தமிழக அரசியல் கட்சிகளுக்குள் முட்டல், மோதல், மக்கள் யார் பக்கம் என கேள்விகள். ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும், வேறு கட்சி ஏதும் பலம் பெற்று விடக்கூடாது என்று காய் நகர்த்தும் கால கட்டம்.ஒரு காலத்தில் அண்ணாதுரை - கருணாநிதி என்று ஆளுமை மிகுந்தவர்கள் இருந்தனர். அது போலவே, எம்.ஜி.ஆர்., - ஜெ., என்ற ஆளுமைகளும் இருந்தன. இன்று இவர்கள் இல்லாமல், தமிழக அரசியலில் ஆளுமை குணம் வெற்றிடமாக
உரத்த சிந்தனை, தனிமனித ஆளுமை,  சாத்தியமா?

தமிழக அரசியல் கட்சிகளுக்குள் முட்டல், மோதல், மக்கள் யார் பக்கம் என கேள்விகள். ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும், வேறு கட்சி ஏதும் பலம் பெற்று விடக்கூடாது என்று காய் நகர்த்தும் கால கட்டம்.

ஒரு காலத்தில் அண்ணாதுரை - கருணாநிதி என்று ஆளுமை மிகுந்தவர்கள் இருந்தனர். அது போலவே, எம்.ஜி.ஆர்., - ஜெ., என்ற ஆளுமைகளும் இருந்தன. இன்று இவர்கள் இல்லாமல், தமிழக அரசியலில் ஆளுமை குணம் வெற்றிடமாக இருக்கிறது. இன்னொரு வெளிச்சம் வரப் போகிறது என்று எதிர்பார்த்து, மக்கள் காத்து இருந்தனர். அது, கண் சிமிட்டி மறைந்து விட்டது.இந்த சூழ்நிலையில், இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி, 'தனிமனித ஆளுமை, தமிழக அரசியலில் இனிமேல் சாத்தியமா...' என்பது தான். அதற்கான பதில், சாத்தியம் தான்.

மன்னர் ஆட்சி காலத்தில் மதியூகி அமைச்சர்களின் துணையோடு ஆளுமை புலப்பட்டது. அது, அந்தக்கால குடிமக்களுக்கும் புலப்பட்டது.மன்னர் ஆட்சி முறை மறைந்து, குடியாட்சி முறை வந்த போது, வளர்ந்த போது, ஆதிக்கம் மிக்கவர்கள் தான் அரசாள முடிந்தது.கருணையால் மக்களைக் கவர்ந்த காந்தி, நேரு, காமராஜர் போன்ற வர்கள் தனி மனித ஆளுமைகள் தான். தன்னுடைய வளர்ச்சி முக்கியம் என்று கட்சிகள் நினைப்பது தப்பே இல்லை. ஆனால், 'எதிர்க்கட்சிகள் எல்லாம் எதிரிக்கட்சிகள், வளரவே கூடாது' என்று பொறாமைப்படாமல், போட்டி என கருதினால், அது அவர்களுக்கும் பெயர் கொடுக்கும்; நாட்டு மக்களுக்கும் பயன் கிடைக்கும்.பொங்கல் பரிசு தொகை, 2,500 ரூபாயை தேர்தல் சமயத்தில் தருவது ஆளுமை அல்ல. அதே சமயம் அதை, 5,000 ரூபாயாக ஆகக் கொடுக்கச் சொல்வதும் ஆளுமை அல்ல. புயல் வீசிய நேரத்தில் இரண்டு கைகளும் தட்டி இருந்தால், அது தான் சரியான ஆளுமை.குடும்பத்தில் தலைவனோ, தலைவியோ ஆளுமையாக இருந்தால், குடும்பம் குதுாகலமாகும். இரட்டை தலைமை, குடும்பத்தில் இருந்தாலும் குழப்பம் தான். ஒருவர் விட்டு கொடுக்கலாம் தான். எனினும், முடிவு எடுக்கும் சூட்சுமத்தில் தான் அந்த குடும்பத்தில் நிம்மதி நிலவும். அது தான் உண்மையான ஆளுமைப் பண்பு.
சாணக்கியத்தனம்


தொழிலில், நிர்வாக திறமையில், தனி மனித ஆளுமைப் பண்பு மெத்த அவசியம். சமயோஜிதம், சாதுர்யம், சாதனைப் படையல், சதுரங்கத்தில் காய் நகர்த்தும் சாணக்கியத்தனம் தொழிலில் மிகவும் முக்கியம். ஆளுக்கு ஒரு கருத்து, நிலைப்பாடு என்று வந்தால், அங்கு கூட்டாஞ்சோறு பொங்க முடியாது. இங்கே ஆளுமை என்பது ஆணவமோ, அகம்பாவமோ அல்ல. வெற்றிக்கான சூத்திரத்தை கண்டுபிடிக்கும் திறமையே.ஆன்மிகத்தில் ஆளுமை என்பது, பெரும்பாலும் வாரிசாக வருவதில்லை. அங்கே ஆளுமை என்பது, சொத்தின் பெருக்கம் அல்ல. கருணையின் கூட்டல் என்பதால் அந்த ஆளுமை வித்தியாசம் ஆனது.ஜாதி தலைமைகள், தன் ஜாதிக்குள் மட்டும் தான் ஆளுமையை சந்திக்க முடிகிறதே தவிர, பொதுமக்கள் முன்னிலையில் பெருமை கொள்ள முடிகிறதா; பதில், கேள்விக்குறி தான்.இவை அரசியலுக்கு பொருந்துமா, பொருந்தாதா என்று சொல்வதை விட, பொருந்த வைக்க பொருத்தமான நபர் தான் தேவை. முன்னாள் பிரதமர் இந்திராவின் தலைமை பண்பை, அவரது வாரிசுகளால் காட்ட முடியவில்லையே! அது மாதிரி தான் தமிழகத்திலும் பார்க்கிறோம்.'குல வித்தை கல்லாமல் பாகம்படும்' என்பது ஏன் அரசியலுக்கு பொருந்தவில்லை!அதனால் தான் வெற்றிடத்தை நிரப்ப, ஒரு தனி மனித ஆளுமை, ரஜினி என்ற பெயரில் வந்து விட்டது என்று பெரும்பாலான மக்கள் நினைத்தனர். ஆனால் அவரோ, சினிமாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், அரசியலுக்கு கொடுக்கவில்லையே...முதல்வராக இருந்த, தி.மு.க.,வின் நிறுவனர் அண்ணாதுரை மறைந்தாலும் அவரது அபிமானிகள், தொண்டர்களின் ஓட்டு வங்கி சிறிது குறைந்தாலும், கட்சி இன்னும் நீடிக்கிறது; அவரின் ஆளுமை இன்னும் தெரிகிறது.அதுபோலவே, எம்.ஜி.ஆரின் ஓட்டு வங்கி இன்னமும் இருக்கிறது. ஆனால், அவர் மறைந்து விட்டார். அது தான், அவரின் ஆளுமை.அசைக்க முடியாத ஆளுமையாக, 1977 - 1987 கால கட்டத்தில், எம்.ஜி.ஆர்., திகழ்ந்தார். சிகிச்சை பெற்ற நிலையில் படுத்துக் கொண்டே, 1984ல் ஜெயித்தார். அவர் வாய் பேச முடியாத நிலையில் கூட, 'உங்களை பார்த்தாலே போதும் தலைவா' என்று தொண்டர்களை அவர் சொல்ல வைத்தார். அது தான் ஆளுமை.அதனால் தான் இன்றைக்கு வரை அவர் ஆரம்பித்து வைத்த ஓட்டுவங்கி சிந்தாமல் சிதறாமல் தொடர்கிறது. அவரின், அ.தி.மு.க., கட்சியில் தலைவர்கள் மாறுகின்றனர்; பேரம் பேசுகின்றனர். ஆனால், தொண்டர்கள் மாறவில்லை.அது மாதிரி தான் ரஜினியும், 1996ல் அவர் கொடுத்த, 'வாய்ஸ்' மீண்டும் தொடரும் என மக்கள் நம்பினர். எம்.ஜி.ஆர்., நோய் வாய்ப்பட்ட கால கட்டம் வேறு. இன்றைக்கு உள்ள நுண்கிருமிகளின் வீரியம் வேறு. அதனால், உடல் நிலை, கிருமி மீது பழியை போட்டு ஒதுங்கிக் கொண்டார் ரஜினி. அதிலும் அவரின் ஆளுமை தென்பட்டது.


ஆளுமை திறன்


தனியே நின்றால் ஓட்டுக்கள் சிதறும் என்று, மூதறிஞர் ராஜாஜி சிந்தித்தார். 1967ல் கூட்டணியை உருவாக்கினார். புத்திசாலியான அண்ணாதுரை, 'தேர்தலில் மட்டும் கூட்டணி' என்றாரே தவிர, ஆட்சியில் கூட்டணி என்று உடன்படிக்கை போடவில்லை. அதுவே, அவருடைய ஆளுமைத்திறன். அதையே கருணாநிதி தொடர்ந்தார். மைனாரிட்டி அரசாக இருந்தாலும், தன் ஆளுமை திறனால் சாதித்தார்.இந்தக் கூட்டணிகள் பிற்காலத்தில் பல பெயர்களில், பல வடிவங்கள் எடுத்தன. தேசிய ஜனநாயக கூட்டணி, 1999 - 2004, ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2006 - 2013, ஜனநாயக முற்போக்கு கூட்டணி 2014 - 2016. இப்படி, கூட்டணிகள் பல உருவாகின. எனினும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரவில்லை.அதற்கு அஸ்திவாரம் போட்டது, அண்ணாதுரை என்ற ஆளுமை.பாரதிய ஜனதா கட்சி டிசம்பர், 1980ல் தான் பிறப்பு எடுத்தது. ஆனால், அசுர வளர்ச்சி... காரணம் அன்பால் ஆண்ட, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆளுமை காட்டினார். பா.ஜ.,வை தமிழ்ப்படுத்தினால், இந்திய மக்கள் கட்சி என்றே வரும். தன் கறாரான நடவடிக்கைகளால், வலது கரமாக அமித் ஷாவை வைத்துக் கொண்டு, ராணுவ கட்டுப்பாடுடன், பிரதமர் மோடி, 2014 முதல் ஆள்கிறார் என்றால், அது பலம் பொருந்திய ஆளுமை திறனால் தான்!வாரிசு அரசியல் நல்லதா, ஆளுமைத்திறன் உடையதா என்று ஒரு கேள்வி. எனக்குத் தெரிந்த குடும்பம் தாத்தா, தமிழக சட்டசபை உறுப்பினர். அவரது மகன்களில் ஒருவர், மத்திய அரசில் அமைச்சராக இருந்தார். அவரது பேரன் இன்றும் லோக்சபா எம்.பி., கொள்கை பிடிப்பின் காரணமாக ஆள வேண்டும் என்பது அவர்கள் நினைப்பு அல்ல. தன் தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். குறுகிய வட்டம் விட்டு இவர்கள் முன்னோக்கி வந்தால் இன்னொரு காமராஜரை, நாடு கண்டு கொள்ளும்.பா.ஜ.,வில் ஒரு விதி இருக்கிறது. கட்சித் தலைமை மூன்று ஆண்டுகள் மட்டுமே. அடுத்த மூன்று ஆண்டுகள் என்பது சூழ்நிலை மற்றும் ஆளுமைத்திறமை அடிப்படையில் மட்டுமே. ஆறு ஆண்டுகளுக்கு மேல் கட்சியின் தலைமை பொறுப்பை தொடர முடியாது என்பது சட்டவிதி. நல்ல விதி. அடுத்தவரை தலைவராக ஆக்கும் விதி.இதுமாதிரி தான் அமெரிக்காவில். ஜனநாயக கட்சி குடியரசு கட்சி கட்சிகளின் கொள்கை அடிப்படையில் தான் போட்டி. வென்று, ஆட்சிக்கு அவர்கள் செயல் ஆற்றும் முறையில் தான் தனிமனித வளர்ச்சி. அதுவும் நான்கு பிளஸ் நான்கு என எட்டு ஆண்டுகள் தான், ஒரு தனி மனிதன் ஆட்சி செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு. ஆள வந்தவர் தன் ஆளுமையை வெற்றிக்கு பின் காட்டுகிறார்.
எதிர்பார்ப்பு


அனுசரித்து போவது வேறு, குற்றம் சாட்டி, குரல் எழுப்புவது வேறு, ஆளுமைத்திறன் மைனஸ் கொள்கை பிடிப்பு என்பது வேறு. பதவிக்காக குடுமிப்பிடி சண்டை போடுவது, சமரசம் பேசுவது வேறு.நான் வங்கி அதிகாரிகள் சங்கத்தில் இருந்த போது, எல்லாரும் ஒரே தலைப்பை எடுத்துப் பேச மாட்டார்கள். ஆளுமை மிக்க தலைவர், 'நீ இதைப் பேசு, நீ இனி இப்படி எதிர் வினை ஆற்று' என்று முன் கூட்டியே திட்டம் இட்டு, சொல்லி விடுவர். பயன், பத்துக்கோரிக்கைகளில், ஐந்தாவது பழுதில்லாமல் கிடைத்து விடும். அது, அந்தத் தலைவரின் ஆளுமைத்திறன்.முகம் தெரியாமல் இருந்தவர்களை கண்டுபிடித்து முகவரி கொடுப்பது ஆளுமைப்பண்பு. அதே சமயம் அவர்கள் முரண்டு பிடித்தால் துாக்கி எறியும் துணிச்சலும் ஆளுமைப்பண்பு தான்.

அடுத்தவர்களிடம் ஆலோசனை கலப்பது நாகரிகப் பண்பு. ஆனால், முடிவு எடுப்பது தான் மட்டுமே என்பது எதேச்சதிகாரம் அல்ல; அதை செயல்படுத்துவது தான் ஆளுமைப்பண்பு. தன்னை நம்பி வந்தவர்களை எப்படியும் காப்பாற்றுவேன் என்பது ஆளுமைப்பண்பு. எண்ணித் துணிக கருமம் என்பது தான் முக்கியமான ஆளுமைப்பண்பு.காதலில் உறுதியுடன் இருந்து கைபிடிப்பது ஆளுமைப்பண்பு. அவரது கட்டுப்பாட்டுக்குள் போல் கொள்கையை பறக்க விட்டால், எந்த சந்தர்ப்பமாக இருந்தாலும், அங்கே ஆளுமைப்பண்பு கைவிட்டுப் போய் விடுகிறது.ஆளுமைப்பண்பு, குடும்பத்தில், தொழிலில், கலையில், நிர்வாகத்தில், அரசியலில் எல்லா இடத்திலும் இருக்கும்; இருக்க வேண்டும். அவன் தான் தலைவன் -- தலைவியாக முடியும். தன்னை விட, தன்னை நம்பி வந்தவர்களை, குடும்பத்தில், தொழிலில், கலையில், நிர்வாகத்தில், அரசியலில் கண்டுபிடித்துக் காப்பாற்றுவது தான் ஆளுமைப்பண்பு.ஆளுமை பண்புக்கு தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்ற போது, 30 ஆண்டுகளாக, வருகிறேன் என்று சொன்னவரிடம், ஆளுமைப்பண்பு இருப்பதாக எதிர்பார்த்தோம். ஆனால், ஆண்டவன் கணக்கு வேறு விதமாகி விட்டது. மீண்டும் ஒரு ஆளுமை வரத் தான் செய்யும். அது, இப்போது இருக்கும் எல்லா ஆளுமையையும் துாக்கி சாப்பிடும் வகையில் இருக்கும். அந்த ஆளுமைக்கு, மக்களை தன்பக்கம் ஈர்ப்பது; அநியாயங்களை ஒழிப்பது; தட்டிக் கேட்கும் துணிச்சல்; அதேசமயம் தாழ்ந்து போக வேண்டிய இடத்தில் கொள்கையை விட்டுக் கொடுக்காத, பணத்துக்காக, ஓட்டுக்காக, பணியாத பண்பாடு காத்தல் போன்றவை இருக்கும்.அப்படி ஒரு தலைமை, தமிழகத்தில் எங்கோ பிறந்து தான் இருக்கிறது. அந்தப் புதிய வெளிச்சம், தனி மனித ஆளுமை சரி என்று சொல்லி, கொள்கைகள் அளவில் தலைதுாக்கி காட்டட்டும்; வரவேற்போம்.ஆனாலும், இன்றைய கால கட்டத்தில் கொள்கைகளின் கூட்டில் தான் தனி மனித ஆளுமை இருக்க வேண்டும் என்ற கணிப்பு, வெற்றி பெறும். இது நம்பிக்கை!சீத்தலைச்சாத்தன்


சமூக ஆர்வலர்


தொடர்புக்கு: இ - மெயில்: send2subvenk@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (10)

Gurumurthy - Kuwait,குவைத்
10-ஜன-202114:52:33 IST Report Abuse
Gurumurthy தனி மனித ஆளுமை சாத்தியமா இல்லையா என்பது தனி. ஆனால் அது மக்களுக்கு நல்லது இல்லை என்பது மட்டும் உண்மை. அவர்களாகவே ஒரு கூட்டத்தை வளர்த்துக்கொண்டு கொள்ளை அடிக்க தான் அது உதவும். இந்த தலைமுறை விழித்துக்கொண்டு அவர்களை விரட்டி அடிக்கவேண்டும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
09-ஜன-202112:35:02 IST Report Abuse
Rengaraj அருமையான கட்டுரை. ஆளுமையை பற்றி வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்டது. பாராட்டுகிறேன். சுயநலம் இல்லாது பொதுநலத்தில் ஈடுபடும்போது ஆளுமை வெளிப்படும். மேலாண்மை கோட்பாடுகளில் தலைமை பண்புகளில் ஒன்று பற்றி சொல்வார்கள். ஒரு தாய் தனது குழந்தைகளின் தேவைகளை எவ்விதம் தெரிந்துகொள்வாளோ அதற்கும் மேலாக ஒரு தலைவன் தனது சீடர்களை, தொண்டர்களை, தன்னை பின்பற்றுவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தாயிடம் கண்டிப்பும் இருக்கும். அரவணைப்பும் இருக்கும். குழந்தையின் நலனுக்காக முடிவு எடுக்கும் அதிகாரமும் இருக்கும். தனிமையில் ஆளுமை பண்பும் சேர்ந்தே இருக்கும். அப்படிப்பட்ட ஆளுமை பண்பு ஒரு தலைவனிடம் வெளிப்பட வேண்டும். தமிழகம் காத்திருக்கிறது.
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
09-ஜன-202107:31:56 IST Report Abuse
Sivaraman .ஆளுமை என்பதைவிட இந்த கணினி மற்றும் நவீன தகவல் தொடர்பு உலகத்தில் போலி மதச்சார்பு ஊழல் வெறுப்புப்பேச்சு மக்களால் நிராகரிக்கப்படுகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X