புதுடில்லி: ''ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் துவக்கப்படும் இன்றைய சிறு தொழில்கள் தான், எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களாக மாறுகின்றன,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சம்பல்பூரில், ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கு நிரந்தர கட்டடம் கட்ட, நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக அடிக்கல் நாட்டி, பிரதமர் மோடி பேசியதாவது: மண்டலங்களுக்கு இடையிலான தொலைவை, தொழில்நுட்பம் குறைத்துள்ளது என்பதை, நாம் உணர வேண்டும். உலகளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவும், 'டிஜிட்டல்' முறையில், பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தி உள்ளது.
மனித மேலாண்மையைப் போல், தொழில்நுட்ப மேலாண்மையும் முக்கியமானது. கடந்த, 10 ஆண்டுகளாக, இந்தியா போதுமான அளவு திறனுடன் இருந்ததால் தான், கொரோனா காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சமாளிக்க முடிந்தது.தற்சார்பு இந்தியா எனும் இலக்கை அடைவதற்கு, புத்தாக்கம், நேர்மை, அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவை, மேலாண்மையில் அவசியமான ஒன்று. இந்த மூன்றும் தான், தற்சார்பு இந்தியாவை அடைய உதவும் முக்கிய மந்திரங்கள்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய, இளம் தலைமுறையினர், பின்தங்கிய பிரிவு மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் இன்று உருவாகும் சிறு தொழில் நிறுவனங்கள் தான், எதிர்காலத்தில், பன்னாட்டு நிறுவனங்களாக மாறுகின்றன. அனைத்து நகரங்களிலும் சுய தொழில்கள் துவக்கப்பட வேண்டும்.
ஏனெனில், இப்போது வேளாண்மை முதல் விண்வெளி வரை, சுய தொழில்கள் துவக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மத்தியில், தே.ஜ., கூட்டணி அரசு, 2014ல் பொறுப்பேற்பதற்கு முன், நாட்டில், 13 மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆறு ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை, 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு, பிரதமர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE