புதுடில்லி : ''நம் நாட்டில் முதல் கட்டமாக, மூன்று கோடி பேருக்கு, கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். ''அடுத்த கட்டமாக ஜூலைக்குள், மேலும், 27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்,'' என, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலையும், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து, 'கோவிஷீல்டு' எனப்படும் கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளன.
ஒத்திகை
இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை, புனேவைச் சேர்ந்த, சீரம் இன்ஸ்டிடியூட் பெற்றுள்ளது. 'கோவிஷீல்டு தடுப்பூசி மருந்திற்கு அவசர கால அனுமதி வழங்கலாம்' என, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து, விரைவில் நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ளது. அதற்கு முன்பாக நேற்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்வு செய்யப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடந்தது.தடுப்பூசி திட்டத்தின் செயல்பாடு, வினியோகம், நிர்வாகம் ஆகியவற்றை ஆராய்ந்து, அதில் பாதிப்புகள் ஏற்பட்டால் எப்படி சமாளிக்கலாம் என்பதை அறிய, இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.
விரைவில் முடிவு
டில்லி அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாமை பார்வையிட்ட மத்திய சுகாதார அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹர்ஷ் வர்தன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி குறித்து பல வதந்திகள் உலவுகின்றன; அவற்றை மக்கள் நம்ப வேண்டாம். மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசத்திற்கும் இடமளிக்க மாட்டோம். போலியோ தடுப்பூசி அறிமுகமான போதும், இது போன்ற வதந்திகள் உலவின. ஆனால், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதால், போலியோ இல்லாத இந்தியா உருவாகியுள்ளது.
முதற்கட்டமாக, நாடு முழுதும் முன்னுரிமை அடிப்படையில், மூன்று கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். அதில், சுகாதார பணியாளர்கள் ஒரு கோடி பேரும், முன்கள பணியாளர்கள், இரண்டு கோடி பேரும் அடங்குவர். ஜூலைக்குள், மேலும், 27 கோடி பேருக்கு, இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும். அவர்கள் யார் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு, அவர்கூறினார்.
ஒவ்வாமை அறிகுறி
அமெரிக்காவின், 'பைசர், மாடர்னா' நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்ட சிலருக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், தடுப்பூசி மருந்தின் முதல், 'டோஸ்' போட்டவர்கள், ஒவ்வாமை அறிகுறி தோன்றினால், மருத்துவர்களை அணுகும்படி, மாசாசூசெட்ஸ் அரசு மருத்துவமனை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நான்கு வாரங்கள் கழித்து, இரண்டாவது, 'டோஸ்' போடுவதற்கு முன், ஒவ்வாமை வல்லுனர்களை கலந்தாலோசிக்க வேண்டும் என, பரிந்துரைத்துள்ளனர். இதற்கிடையே, 'தீவிர ஒவ்வாமை பாதிப்பு உள்ள தனி நபர்களுக்கு, தடுப்பூசி மருந்து செலுத்துவதை தவிர்க்கலாம்' என, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE