திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு திரவுபதி அம்மன் கோவில் குளத்திற்கு நீர்வரத்து குறித்து தினமலர் செய்தி எதிரொலியால் ஆணையர் ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு பகுதியில் பெய்த தொடர் மழையால், குளத்தின் அருகேயுள்ள மண்ணாடிப்பட்டு ஏரி முழு கொள்ளளவை எட்டியது. ஆனால், கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் குளத்தில் தண்ணீர் நிரம்பவில்லை. குளத்திற்கு நீர்வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினமலர் நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், நேற்று குளத்தை பார்வையிட்டு தண்ணீர் வரத்திற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்தார். உதவி பொறியாளர் மல்லிகா அர்ஜூன் உட்பட பலர் உடனிருந்தனர்.ஆணையர் கூறுகையில், குளத்தின் அருகே 100 மீட்டர் இடைவெளியில் மண்ணாடிப் பட்டு, திருக்கனுார் ஏரிகளின் நீர்வரத்து வாய்க்கால் செல்கிறது. அங்கிருந்து, குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர, அப்பகுதி நிலத்தின் உரிமையாளர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.கொம்யூன் பஞ்சாயத்து மூலம் 'நீரும் ஊரும்' திட்டத்தில் தனியார் பங்களிப்புடன் செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, காட்டேரிக்குப்பம், சந்தைப்புதுக்குப்பம் பகுதிகளில் துார் வாரிய குளத்தில் தண்ணீர் நிரம்பியதால், 20 அடிக்கு மேல் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மற்ற கிராமங்களில் குளங்கள், தனியார் பங்களிப்புடன் துார்வாரி தண்ணீர் சேமிக்கப்படும் என தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE