மும்பை:ஐ.நா., சபையின், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு அமைப்பின் பிரதிநிதியாக, உலக அழகி பட்டம் பெற்ற, இந்தியாவைச் சேர்ந்த, நடிகை மனுஷி ஷில்லார், 23, நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 'ஆரஞ்ச் தி வோர்ல்டு' என்ற, சர்வதேச அமைப்பை உருவாக்கி உள்ளது.இந்த அமைப்பின் பிரதி நிதியாக, 2017ல் உலக அழகி பட்டம் வென்றவரும், நடிகையுமான மனுஷி ஷில்லார், 23, நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து, மனுஷி கூறியதாவது:உலகம் முழுதும், அனைத்து வயது பெண்களும் பல்வேறு வடிவங்களில் வன்முறைக்கு ஆளாகின்றனர். ஒரு பெண்ணாக, என்னால் அந்த வேதனையை உணர முடிகிறது.கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலானதை தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறை உச்சத்தை எட்டியுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பான உலகை கட்டி எழுப்பும் முயற்சிகளில், நாம் தீவிரமாக செயல்பட வேண்டும். அவர்களுக்காக உரத்த குரல் எழுப்ப வேண்டும். இதற்கு பெண்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கான அதிகாரத்தை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.மனுஷி, பிரித்விராஜ் என்ற ஹிந்தி படத்தில், அக் ஷய் குமாருடன் நடித்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE