சிங்கம்புணரி : எஸ்.புதுார் ஒன்றியத்தில் மினி கிளினிக் திறப்பின் போது அ.தி.மு.க., தி.மு.க., வினர் மோதிக் கொண்டனர்.இதனால் விழா பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
முசுண்டபட்டி ஊராட்சியில் தமிழக அரசின் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பாஸ்கரன், தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியகருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாக்களில் அ.தி.மு.க., தி.மு.க., வினருக்கு இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியிலும் அது எதிரொலித்தது. கிளினிக் திறப்பிற்கு பிறகு நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் மாவட்ட சேர்மன் மணிபாஸ்கரன் பேசும்போது அப்பகுதியில் உள்ள சில சாலைகளை தனது முயற்சியால் கொண்டு வந்ததாக பேசினார்.
இதற்கு மேடையில் இருந்த தி.மு.க., எம்.எல்.ஏ., பெரியகருப்பன் எதிர்ப்பு தெரிவித்ததோடு, உலகம்பட்டி மட்டாங்காடு ரோட்டை தான் கொண்டு வந்ததாகவும், மேலும் அரசுப்பணத்தில் போட்ட ரோட்டை எப்படி நீங்கள் போட்டதாக கூறமுடியும் என்றும் கேட்டார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் விழா பாதியிலேயே ரத்தாகி அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்ட அ.தி.மு.க., வினர் வெளியேறினர். மேடையில் இருந்த பெரியகருப்பன் உள்ளிட்ட தி.மு.க., வினர் சிறிது நேரத்துக்கு பிறகு கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE